திருவண்ணாமலையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்
விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அவர்கள் பேசுகையில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வள துறையின் மூலம் ஏரி, குளங்கள் மற்றும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காடுகளை மறுசீரமைப்பு செய்து முள்செடிகளை அகற்றி விட்டு பலன்தரக்கூடிய மரக்கன்றுகளை நட்டு அடர்ந்த காடுகளாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மண்ணிற்கு நுண்ணுயிர் ஊட்டச்சத்து, மண்வள பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு அவ்வப்போது மண் தரத்தை பற்றியும், நிலத்திற்கு உயிரூட்டும் நுண்ணுயிர் சத்தை பற்றியும் வேளாண்மைத்துறையின் சார்பில் நடமாடும் மண்வள பரிசோதனை வாகனத்தின் மூலம் மண்வள பரிசோதனைக்கான விழிப்புணர்வு வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் விளையக்கூடிய பிரதான பயிர்களான நெல், கரும்பு, மணிலா போன்றவைகளுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும். எதிர் வரும் காலங்கள் வடகிழக்கு பருவ மழைக்காலம் என்பதால் ஏரிகள், பக்கக்கால்வாய்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
விவசாயிகள் வலியுறுத்திய அனைத்து கோரிக்கைகளையும் தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தீர்வு காண வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவுரை வழங்கினார்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் பாலா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சோமசுந்தரம், திருவண்ணாமலை கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் நடராசன், வேளாண்மை துணை இயக்குநர் மாரியப்பன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu