திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு முகாம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர்
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வேலு
திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட மகளிா் திட்டம் இணைந்து மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.
தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை தொடங்கிவைத்து, தோ்வு செய்யப்பட்ட இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
தொடா்ந்து அவா் பேசுகையில்,
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 44 தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இவற்றில் 550-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட 8,607 பேரை தோ்வு செய்து பணி ஆணைகள் வழங்கி உள்ளனா்.
தமிழ்நாடு முதலமைச்சர் சொன்னதை தான் செய்வோம் செய்வதை தான் சொல்வோம் என்ற தாரக மந்திரத்தை வைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இளைஞர்களை ஊக்குவித்து பல்வேறு நிலைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்ற வகையில் நான் முதல்வன் உயர்வுக்கு படி புதுமைப்பெண் திட்டம் தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி இந்தியாவில் அதிகபடியான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகின்ற முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
2006 ஆண்டிற்கு முன்பு தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை அளிக்கின்ற வகையில் எந்தவிதமான பெரிய தொழிற்சாலைகளும் இயங்கியதில்லை. 2006 2011 ஆட்சி காலத்தில் நான் உணவுத்துறை அமைச்சராக அங்கம் வகித்த பொழுது அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களிடத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்சாலை அமைத்தால் பல்வேறு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எடுத்து சொன்னதன் அடிப்படையில் செய்யாறு பகுதியில் சிப்காட் அமைக்கப்பட்டு இன்றைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி சமீபத்தில் அமெரிக்காவிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 14 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டு 18 நிறுவனங்கள், 500 பார்ச்சூன் நிறுவனங்கள் உள்ளிட்ட உலகில் புகழ்பெற்ற தலைசிறந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி புதிய முதலீட்டுகளை ஈர்த்து வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நமது தமிழக அரசு கையொப்பமிட்டுள்ளது.
இன்னும் பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கும் இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்பை உருவாக்குகின்ற வழியில் நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டுள்ளார்கள்.
இந்த மாபெரும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று நியமன ஆணைகள் பெறும் இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் பேசினார்.
362 பேருக்கு பணி ஆணைகள்:
தொடா்ந்து நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 103 தனியாா்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில், 1,267 வேலை நாடுநா்கள் கலந்து கொண்டனா். இவா்களில் 362 இளைஞா்கள் தோ்வு செய்யப்பட்டு தனியாா் நிறுவனங்கள் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
விழாவில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஜோதி, மாவட்ட திட்ட இயக்குநா் சரண்யாதேவி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் யோகலட்சுமி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu