மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு
X

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு விடிய விடிய வந்தடைந்தன.

திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

அங்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகளிலும், ஆரணி மக்களவைத் தொகுதியில் 1,760 வாக்குச்சாவடிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், ஒருசில வாக்குச்சாடிகளில் மாலை மணிக்குள் வாக்குச்சாவடி வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் எனப்படும் ஒப்புகை ரசீது இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் பதிவு எண், வாக்கு எண்ணும் மையத்தில் பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் தனித்தனி உறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. பின்னர், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், வாக்குச்சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், திருவண்ணாமலையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாகனங்கள் மூலம் விடிய, விடிய கொண்டுவந்து சேர்க்கப்பட்டது.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிகளில் இடம் பெற்றுள்ள திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், செங்கம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 1722 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஆரணி மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர், செஞ்சி, மயிலம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 1760 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் திருவண்ணாமலை சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகளில் இருந்து நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கி, விடிய, விடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவந்து சேர்க்கும் பணி நடந்தது. ஜவ்வாதுமலை பகுதியில், போக்குவரத்து வசதியில்லாத மலை கிராமங்களில் இருந்து மின்னணு இயந்திரங்கள் கொண்டுவருவதில் சற்று தாமதம் ஏற்பட்டதால், சுமார் 150 வாக்குச்சாவடிகளில் இருந்து இன்று அதிகாலைதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து சேர்ந்தன. அதைத்தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

மேலும், வாக்கு எண்ணும் மையங்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில்(ஸ்ட்ராங் ரூம்), காற்றுகூட புகமுடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு மையத்திலும் சுமார் 250 அதிநவீன கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 3 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் கண்காணிக்கின்றனர்.

வாக்கு எண்ணும் மையங்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், டிஆர்ஓ பிரியதர்ஷினி, எஸ்.பி கார்த்திகேயன் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!