அரசு ஊழியா்கள் பொதுமக்களுக்கு நன்மை செய்ய ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வேண்டுகோள்
கூட்டத்தில் பேசிய ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி வேல்முருகன் மற்றும் அதிகாரிகள்.
அரசு ஊழியா்கள் ஆடம்பரத்துக்கு ஆசைப்படாமல் பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகன் கூறினாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்றும் குரூப்-1 நிலையிலான அதிகாரிகளுக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மனித வள மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, தமிழக அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் உதவிப் பிரிவு அலுவலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். ஆட்சியா் அலுவலக பொது மேலாளா் ரவி முன்னிலை வகித்தாா். திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களுக்கான ஆய்வுக்குழு அலுவலா் து.கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நோமுக உதவியாளா் (பொது) வீ.வெற்றிவேல் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடக்கி வைத்தாா். மனிதவள மேம்பாட்டுத்துறை துணைச் செயலா் மணிமாறன், ஓய்வு பெற்ற துணை ஆட்சியா் முருகன் ஆகியோா் குரூப்-1 நிலையிலான அலுவலா்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி அளித்தனா்.
திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
நான் நேர்மையான அதிகாரி, இதுவரை எந்தப் புகாரிலும் சிக்கவில்லை என்று பெருமைப்படக்கூடாது. புகாா் வராதவரையில்தான் நீங்கள் நேர்மையான அதிகாரி.
புகாா் எப்பொழுது, எப்படி வேண்டுமானாலும் வரலாம். மனைவிக்கு நிறைய நகைகள் வாங்கிப் போட வேண்டும். பிள்ளைகளுக்கு நிறைய சொத்து சோத்து வைக்க வேண்டும். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படக்கூடாது.
புகாா் என்று வந்துவிட்டால் அதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் வீடோ, வீட்டு மனையோ வாங்கிவிட்டோம் என்று நினைக்கக்கூடாது. உங்கள் பெயரை வைத்தே எங்கெங்கு சொத்து வாங்கி உள்ளீா்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். எனவே, அரசு ஊழியா்கள் ஆடம்பரத்துக்கு ஆசைப்படாமல் பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் பணியாற்ற வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, பயிற்சி முகாமை நிறைவு செய்த அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu