திருவண்ணாமலையில் மருத்துவர்கள் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் மருத்துவப் பணியை புறக்கணித்து கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட தலைவர் மருத்துவர் பாலச்சந்திரன், இந்திய மருத்துவர்கள் சங்க மாவட்ட தலைவர் மருத்துவர் கதிரவன் ஆகியோர் தலைமையில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நடுநிலையாக விசாரணை செய்து உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், மருத்துவக் கல்லூரியில் சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் , மத்திய சுகாதார பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு. தொடர்ந்து மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் பேரணியாக சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள ஏராளமான மருத்துவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தினால் ஏராளமான புற நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தனர்.
போளூர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கொல்கத்தாவில் பெண் மருத்துவரின் கொலை சம்பவத்திற்கு நியாயம் வேண்டியும் மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் மருத்துவர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முதுகலை பட்டதாரி பெண் மருத்துவரின் கொலைக்கு நியாயம் வேண்டும். சேவை மருத்துவர்கள் மீது நடைபெறும் கொலை வெறி தாக்குதலை கண்டித்தும் மருத்துவமனைகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் போளூர் கிளை சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது, இந்த அறப்போராட்டத்தில் போளூர் பகுதியைச் சேர்ந்த அனைத்து மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu