கிரிக்கெட் விளையாடி அவசிய வாக்களிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்..!
கிரிக்கெட் வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்
இந்திய மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகத்தின் கடமையான வாக்களிக்கும் உரிமையை அறிவுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், வேளாண்மை துறை மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடி அவர்களுக்கு வாக்காளர் கையேட்டினை வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 100 சதவீதம்வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு ஆட்சி தொடங்கி வைத்தார்.
கிரிக்கெட் விளையாடி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்
பள்ளி மைதானத்தில் இளைஞர்கள் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எனக்கு பந்து போடுங்கப்பா என கேட்டு பேட்டிங் செய்தார்.
அப்போது போடப்பட்ட பந்துகளை நேர்த்தியாக அடித்து விலாசினார்.
முதலில் இடது கையில் பேட்டிங் செய்தார். பின்னர் வலது கையில் பேட்டிங் செய்ய ஆரம்பித்தார். இடது கை பேட்ஸ்மேன் வலது கையில் எப்படி பேட்டிங் செய்யப் போகிறார் என நினைத்து இளைஞர்கள் அவருக்கு மெதுவாக பந்தை போட்டனர். இதை பார்த்த கலெக்டர் வேகமாக போடுங்கப்பா எனக் கூறினார். இதை எடுத்து வேகமாக வந்த பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விலாசி கைத்தட்டலைப் பெற்றார்.
இடது வலது என கலெக்டர் இருபுறங்களிலும் பேட்டிங் செய்ததை பார்த்த வீரர்கள் திகைத்து நின்றனர். தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு பற்றி இளைஞர்களுக்கு எடுத்துக் கூறினார். மேலும் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, வாக்காளர் கையேட்டினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆரணி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி , வருவாய் கோட்டாட்சியர்கள் , ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்ட மேம்பாட்டு துறை அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், தேர்தல் சிறப்பு அதிகாரிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu