திருவண்ணாமலையில் இரண்டாவது நாளாக பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் இரண்டாவது நாளாக பக்தர்கள் கிரிவலம்
X

கோவிலுக்குள் செல்வதற்கு காத்திருந்த பக்தர்களின் கூட்டம்

திருவண்ணாமலையில் பௌர்ணமியொட்டி 2வது நாளாக பக்தர்கள் கிரிவலம் செய்தனர். கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களிலும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் பல்வேறு மாவட்ட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி இம்மாதத்தின் இரண்டாவது பௌர்ணமி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கி, நேற்று மாலை 5.38 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, நேற்று முன்தினம் மாலையில் இருந்து பக்கர்கள் கிரிவலம் வந்தனர். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பிறகு பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக உயர்ந்தது. விடிய விடிய பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபட்டனர்.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று கனமழை இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனாலும், திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் பகல் முழுவதும் மழை இல்லை. இதனால் வழக்கம்போல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இந்நிலையில் 2வது நாளாக நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபட்டனர். நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக, சிறப்பு கட்டண தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை நேற்றும் ரத்து செய்யப்பட்டது. பொது தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கிரிவலம் முடித்துவிட்டு தங்களது ஊர்களுக்கு செல்ல பக்தர்கள் ரயில் நிலையம் மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களில் குவிந்தனர். ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியதால் குழந்தைகளுடன் வந்திருந்த தாய்மார்களும், முதியவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

குளியல் அறைகளை உடனடியாக திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை

கோவில் மதில் சுவரை ஒட்டி அமைந்துள்ள அம்மணி அம்மன் கோபுரம் அருகில் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் மற்றும் மொட்டை அடிக்கும் நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்களுக்காக குளிப்பதற்கு குளியல் அறைகள் கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பக்தர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் பூட்டியே வைத்துள்ளனர். இதனால் பக்தர்கள் அப்பகுதியில் தனியார்கள் நடத்தும் குளியல் அறைகளை பயன்படுத்த வேண்டிய நிலையிலும் கூடுதல் கட்டணங்களை அளிக்க வேண்டிய நிலையிலும் உள்ளனர். இதனால் கோயில் நிர்வாகம் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான குளியல் அறைகளை உடனடியாக திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி