தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அருணாலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அருணாலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
X

வெள்ளிக்கவசத்தில் அருள் பாலித்த உற்சவர் அண்ணாமலையார்

தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக அருணாலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் தீபாவளி தினமான இன்று அதிகாலையிலேயே பக்தர்களின் கூட்டம் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அலை மோதியது . காலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் .

அதிகாலையில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் மலர்களால் அலங்கரித்து, வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. மேலும் கோவிலில் உள்ள பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று உற்சவருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பிறகே சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. இன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் விடுமுறை அறிவித்துள்ள காரணத்தினால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

தீபாவளி பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை நகரை சேர்ந்த மக்கள் மட்டுமில்லாமல் பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் பட்டாசு, புது துணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக திருவண்ணாமலையில் உள்ள கடை வீதிகளில், நேற்று மாலை குவிந்தனர். நள்ளிரவு வரை கடைகள் திறந்திருந்தது.

குறிப்பாக பட்டாசு கடைகளிலும், ஜவுளிக்கடைகளிலும் மக்களின் கூட்டம் அலைமோதியது. எண்ணெய் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்ந்ததாலும் தீபாவளி பலகாரங்கள் விலை 4 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சில கடைகளில் முறுக்கு, அதிரசம், ஒன்றுக்கு தலா ரூ.8 க்கும் 2 ரூபாய்க்கு விற்கப்பட்ட தட்டை ரூ.5 க்கும், தேன்குழல், நெய் உருண்டை ரூ7க்கும், முந்திரிகொத்து ரூ.10க்கும் விற்கப்படுகிறது. பெரிய விற்பனை கடைகளில் இவற்றின் விலை மேலும் உயர்ந்துள்ளது.

மேலும் திருவண்ணாமலை மாட வீதியின் சாலையோரங்களில் ஏராளமான சிறு வியாபாரிகள் தற்காலிக கடை அமைத்து உள்ளனர். திருவண்ணாமலை நகரில் சின்னக்கடை தெரு, திருவூடல் தெரு, கடலைக்கடை மூலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்த இடமின்றி கடை வீதிகள் திணறியது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

கண்காணிப்பு கோபுரங்களில் பைனாகுலர் மூலம் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் . அதுமட்டுமின்றி தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் மக்களின் கூட்டமும் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் அதிகமாக காணப்பட்டது.

ஆரணி கடைவீதியில் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி, ஆரணி கடை விதியில் பொருள்கள் வாங்க பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆரணி சந்தை சாலை, காந்தி சாலை, மண்டி வீதி ஆகிய இடங்களில் உள்ள ஜவுளிக் கடைகள், மளிகைக் கடைகள், பட்டாசு கடைகள், பட்டு ஜவுளிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால், அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸாா் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

கொசப்பாளையத்தில் பட்டு ஜவுளிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

Tags

Next Story