திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள்

திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் குறித்த செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அருள்மொழி தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணைத்தலைவர்கள் ரவிச்சந்திரன், ஏழுமலை, சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் ஏழுமலை, மாநில செயலாளர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில்,
இறந்த சாலை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும். 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள சாலை பணியாளர்களை நியமிக்க மாற்றுப்பணி உத்தரவு வழங்கிட வேண்டும், 50-க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்களை பலி கொண்ட ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய அரசு உடனடியாக தடை செய்திட வேண்டும்.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை, சரண்டர் விடுப்பு சம்பளங்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேல், ஜெய்சங்கர், தேவேந்திரன், மாவட்ட இணை செயலாளர்கள் ஏழுமலை, முருகன், முத்து, பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பலராமன் நன்றி கூறினார்.
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள மேற்கு ஆரணி, ஆரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் நடைபெற்றது.
இதில் வட்ட கிளைத் தலைவர் இல பாஸ்கரன் கிளை செயலாளர் பரசுராமன் ஊரக வளர்ச்சி சங்கம் வட்டார தலைவர் மணிமேகலை மற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். இறுதியில் வட்ட கிளை பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
பட்டா கேட்டு தர்ணா
திருவண்ணாமலையில் வீட்டுமனை பட்டா கேட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை ஒன்றியம் நவம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மதுரா இருதயபுரம் கிராமத்தில் 126 குடும்பங்களும், அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரா சின்னப்பாலியப்பட்டு கிராமத்தில் 16 குடும்பங்களும், தண்டராம்பட்டு அருகில் வாணாபுரம் பெரியமலை பாதை இருளர் குடிசை பகுதியில் 26 குடும்பங்களும் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் வீடுகட்டி குடியிருக்கும் வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு வசதி, சாலை வசதி, குடிநீர் வசதிகளும் உள்ளது. அவர்கள் வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்ததாக கூறுப்படுகிறது.
இந்த நிலையில் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ஒரு வாரத்திற்குள் இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதைத் தொடர்ந்து அவர்கள் கோரிக்கை மனுக்களை வருவாய் கோட்டாட்சியரிடம் வழங்கினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், பட்டா கேட்டு கிராமத்தில் இருந்து நடைபயணமாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu