கிரிவலப்பாதையில் நாய்கள் கடித்து மான் உயிரிழப்பு

இறந்த மானை அடக்கம் செய்ய கொண்டு சென்ற வனத்துறையினர்
திருவண்ணாமலை தீபமலை மற்றும் கவுத்தி, வேடியப்பன் மலைகளில் ஆயிரக்கணக்கான மான்கள் உள்ளன. சமீபகாலமாக மலைப்பகுதியில் இருந்து மான்கள் கூட்டம் கூட்டமாக மலையடிவார பகுதியில் நடமாடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, கிரிவலப்பாதையில் பழனி ஆண்டவர் கோயில் அருகே மலையடிவாரத்தில், கிரிவலப்பாதையொட்டி அமைத்துள்ள கம்பி வேலிகளுக்கு அருகே மான்கள் கூட்டம் கூட்டமாக காத்திருப்பதும், அவற்றுக்கு கிரிவல பக்தர்கள் உணவு வழங்குவதும் வழக்கமாகிவிட்டது. கிரிவலப்பாதையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், சாலையை கடக்கும் மான்கள் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன. அதோடு, நாய்கள் விரட்டி கடிப்பதாலும் மான்கள் இறப்பது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், காலை திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பழனி ஆண்டவர் கோயில் எதிரில் உள்ள காப்புக்காடு பகுதிக்குள் நுழைந்த நாய்கள், அங்கிருந்த மானை விரட்டிச் சென்று கடித்து குதறியது. இதனால், மான் துடிதுடித்து உயிருக்கு போராடியது.
உடனடியாக, அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடிச்சென்று மானை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி மான் உயிரிழந்தது. அதைத்தொடர்ந்து, பலியான மானை வனத்துறையினர் அடக்கம் செய்தனர்.
திருவண்ணாமலையில் அடுத்தடுத்து மான்களை நாய்கள் கடிப்பதால் பலியாகும் சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருவதால் கிரிவலப் பாதை வனப்பகுதியில் இருந்து மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வெளியேறாத வகையில் வனத்துறை சார்பில் வேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. இதன் காரணமாக மான்கள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. அவ்வாறு வரும் மான்களை சில சமயங்களில் நாய்கள் துரத்தி கடித்து கொன்று விடுகின்றன.
இதனால் வன விலங்குகள் காட்டில் இருந்து தண்ணீர் தேடி வெளியே வராமல் இருக்க கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலை காப்பு காடு வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் திருவண்ணாமலை வன சரகத்தை சேர்ந்த அலுவலர்கள் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu