அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டம்

விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக வீற்றிருக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்கின்றனர். வார நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும், ஆனால், விடுமுறை நாட்களில் அவர்களது எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துவிடும்.

பவுர்ணமி உள்ளிட்ட விழா நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த நிலை மாறி, அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தொடர் அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.

இந்நிலையில், ஞாயிறு விடுமுறை தினமான நேற்று, அதிகாலையில் இருந்தே தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ராஜ கோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு காலம் என்பதாலும், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து வருவதாலும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வருகை சற்று குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.

மூலவரை தொடர்ந்து, அம்மன் சன்னதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. கோவிலில் பக்தர்கள் நடந்து செல்லும் வழியில் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க தேங்காய் நார் தரை விரிப்புகள் விரிக்கப்பட்டு இருந்தது. மேலும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், மோர் வழங்கப்பட்டது.

பக்தர்கள் வருகை அதிகரித்ததால், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்கள் கார்களை நிறுத்த போதிய இடவசதியில்லாமல் தவித்தனர். மாட வீதிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். நேற்று வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

Next Story