நகைக் கடை உரிமையாளரின் மகன் கடத்தல் வழக்கில் குற்றவாளிகள் சிறையில் அடைப்பு

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்
நகைக்கடை உரிமையாளரின் மகன்களை கடத்திய வழக்கில் கைதான கூலிப்படை தலைவனை போலீஸ் கஸ்டடியில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் ரூ.70 லட்சம் கடனை வசூலிப்பதற்காக, நகைக்கடை உரிமையாளரின் மகன்களை காரில் கடத்திய வழக்கில், முக்கிய குற்றவாளியான கூலிப்படை தலைவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரிக்க கூலிப்படை தலைவனை கஸ்ட்டியில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திருவண்ணாமலை ஐயங்குளத்தெருவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் நரேந்திரகுமாரின் மகன்கள் ஜித்தேஷ், ஹரிசந்த் . இவர்கள் கடந்த 27ம் தேதி இரவு ஐயங்குள தெரு வழியாக சென்ற போது. மர்ம கும்பல் தாக்கி காரில் கடத்திச் சென்றனர். பின்னர், ரூ.70 லட்சம் கேட்டு மிரட்டியது. அதைத்தொடர்ந்து ரூ.10 லட்சத்தை பெற்றுக் கொண்டு இரண்டு பேரையும் விடுவித்துவிட்டு கடத்தல் கும்பல் தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தலில் ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த மனோ என்கிற கபாலி, விக்ரம், வாசிம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உடந்தையாக இரு ந்த திருவண்ணாமலையைச் சேர்ந்தநகை அடகு கடைக்காரர் ஹான்ஸ்ராஜ் கைது செய்யப்பட்டார்.
4 பேரிடமும் நடத்திய விசாரணையில், இந்த கடத்தலுக்கு கூலிப்படை தலைவனாக செயல்பட்டவர் ரவுடியான பெங்களூருவை சேர்ந்த பில்லா என்பது தெரியவந்தது. பில்லா உட்பட இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் 7 பேரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் கடந்த 3 நாட்களாக பெங்களூருவில் முகாமிட்டு தேடினர். இந்நிலையில் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு தப்ப முயன்ற பில்லாவை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் பில்லாவுடன் இருந்த ராஜ்குமார் மற்றும் சதீஷ் ஆகியோரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், பிழைப்புக்காக பெங்களூருக்கு சென்ற போது பில்லாவுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக, அவருடன் சட்ட விரோத செயல்களில் இணைந்து செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் 3 பேரையும் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாகவுள்ள மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். ஒட்டுமொத்த கும்பலும் சிக்கிய பிறகே இதன்பின்னணியில் உள்ள முழுமையான தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என தெரிகிறது.
இதனால் கூலிப்படை தலைவன் பில்லாவை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த கடத்தல் வழக்கில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தவுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu