கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர் உத்தரவு

கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர் உத்தரவு
X

கிரிவலப் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Tiruvannamalai Collector News Today -திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை பக்தர்கள் நடந்து செல்வதற்கு மட்டுமே. அது வியாபார பகுதி அல்ல என்பதால், அங்குள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.

Tiruvannamalai Collector News Today

-திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தீபத்திருவிழா, பவுர்ணமியையொட்டி கிரிவலப்பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி கடைகள் அமைப்பது குறித்து கிரிவலப்பாதையில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் தரை கடை சிறு வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை வகித்தார். போலீஸ் எஸ்.பி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

அப்போது கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:

கிரிவலப்பாதை மற்றும் அதை ஒட்டியுள்ள நடைபாதை ஆகியவை கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வித இடையூறுகளும் இல்லாமல், கிரிவலம் செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது நடைபாதை முழுவதும், வியாபார தளமாக மாறிவிட்டது.

நடைபாதைகளில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக, டீக்கடை ஓட்டல் நடத்துபவர்கள் நாற்காலிகளை போட்டு வியாபாரம் செய்கின்றனர் . நடைபாதையில் சிறு வணிகர்கள் கடை வைக்கக் கூடாது. நடைபாதையில் நாற்காலிகளை போட்டு இடையூறு செய்வதால், கிரிவலம் செல்லும் பக்தர்கள் சாலையில் நடந்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. பக்தர்களுக்கும் கிரிவலம் செல்வது, கடினமாக உள்ளது. எனவே, கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும்.

கிரிவலப்பாதை என்பது, பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு மட்டுமே உள்ளது. கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு பழங்கள் பொம்மைகள் அவர்களின் பகுதிகளிலேயே அது கிடைக்கிறது. அவர்கள் இங்கு வந்து தான் வாங்க வேண்டும் என்பது இல்லை. கிரிவலப் பாதையை வியாபார தளமாக மாற்றக்கூடாது.

மேலும் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு, தண்ணீர் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளது . அதில் குறிப்பிட்டுள்ள விலையை விட, அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிரிவலப்பாதையில் வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரிவலப்பாதையை சுத்தமாக வைத்து கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கிரிவலப்பாதையில் தற்போது இலவச கழிவறைகள், முறையாக பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினந்தோறும் இலவச கழிப்பறைகள் திறந்து வைத்து பராமரிக்கவும், குடிதண்ணீர் கிடைப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆன்மிக பக்தர்கள் சொந்த இடங்களில், அன்னதானம் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. மேலும் பிளாஸ்டிக் பாக்கெட் மூலம் குடிநீர் விநியோகிக்கக்கூடாது. அன்னதானம் வழங்கும் இடத்திலேயே உணவருந்த பயன்படுத்திய பொருட்களை போட ஏதுவாக குப்பை கூடைகளை அன்னதானம் அளிப்பவர்களே எடுத்து வர வேண்டும். அன்னதானம் செய்யும் இடங்களில் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை, வருவாய்த்துறை, போலீசார் மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்களால் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அனுமதி அளிக்கப்பட்ட இடம் தவிர வேறு இடங்களில் அன்னதானம் அளிப்பவர்கள் மீது, போலீசார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அன்னதானம் அளிக்க விருப்பம் உள்ளவர்கள், திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகம் அல்லது மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரை 04175- 237416, 9865689838, 9047749266 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவிகள் பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை ஆர்டிஓ மந்தாகினி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சரண்யா தேவி, நகராட்சி ஆணையாளர் முருகேசன் மற்றும் அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story