திருவண்ணாமலையில் ரோடு ரேஸ் சைக்கிளிங் போட்டி: ஆட்சியர் தொடக்கம்
திருவண்ணாமலையில் ரோடு ரேஸ் சைக்கிளிங் போட்டியை கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சைக்கிளிங் சங்கம் இணைந்து திருவண்ணாமலை கிரிவலப்பாதை காஞ்சி சாலை சந்திப்பு அருகில் மாவட்டங்களுக்கு இடையேயான ரோடு ரேஸ் சைக்கிளிங் சாம்பியன் ஷிப் போட்டி நேற்று நடந்தது.
இதில் மாற்றுத்திறன் கொண்டவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், சிறப்பு பங்கேற்பாளர்கள் உள்பட 16 பிரிவுகளின் கீழ் சைக்கிளிங் போட்டி நடைபெற்றது.போட்டியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 815 பேர் உள்பட 1,318 பேர் கலந்துகொண்டனர். போட்டியானது 1 கிலோ மீட்டர் முதல் 30 கிலோ மீட்டர் வரை வயதிற்கு தகுந்தார் போல் நடத்தப்பட்டது. சைக்கிளிங் போட்டியை மாவட்ட கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து கலெக்டர் முருகேஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவிதேஜா ஆகியோர் போட்டியாளர்களுடன் சேர்ந்து சைக்கிளிங் சென்றனர். போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு சைக்கிளிங் சங்க பொதுச்செயலாளர் சுப்பிரமணிராஜ், திருவண்ணாமலை மாவட்ட சைக்கிளிங் சங்க தலைவர் டாக்டர் பிரவின்ஸ்ரீதரன், மாவட்ட சைக்கிளிங் சங்க தலைவர் டி.அரவிந்தகுமார், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு சைக்கிளிங் சங்க ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் பெரியகருப்பன் மற்றும் திருவண்ணாமலை சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu