தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் தூய்மை பணிகளை ஆட்சியர் ஆய்வு

தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் தூய்மை பணிகளை ஆட்சியர் ஆய்வு
X

மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் அவர்கள்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார்.

திருவண்ணாமலையில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை கடந்த 3-ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சியில் மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் மக்கள் பங்களிப்புடன் தூய்மையான நகரங்களை உருவாக்குவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் செய்வதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி நேற்று திருவண்ணாமலை நகர பஸ் நிலையம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. பஸ் நிலையத்தில் உள்ள பொது கழிப்பறைகள் தூய்மை செய்யப்பட்டது. சுவர்களில் இருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டது. அந்த சுவர்களில் தூய்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டன. பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

திருவண்ணாமலை ரயில் நிலைய வளாகம் மற்றும் சாலைகள் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தாமரை நகர் பகுதியில் உள்ள பூங்கா முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

செங்கம் சாலையில் டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் கிரிவலப்பாதை சந்திப்பு வரை உள்ள சாலை முழுவதும் தூய்மை செய்யப்பட்டது. எமலிங்கம் அருகில் உள்ள மயானம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டது. திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நடைபெற்ற தூய்மை பணியை ஆட்சியர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை சிறப்பான முறையில் செயல்படுத்திட உரிய அறிவுரைகளை நகராட்சி அலுவலர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து அவர் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், தாசில்தார் சுரேஷ், நகராட்சி ஆணையாளர் முருகேசன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ஏ. ஏ. ஆறுமுகம், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மை அருணை இயக்கத்தினர், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business