அருணாச்சலேஸ்வரர் கோயில் மாட வீதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்
அருணாச்சலேஸ்வரர் கோயில் முன்பு வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்
திருவண்ணாமலை தேரடித் தெருவில் முதலமைச்சர் ஸ்டாலின் திருவண்ணாமலை திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைவர்களும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அவர்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அருகே உள்ள சோ.காட்டுக்குளத்தில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்துகொண்டு திருவண்ணாமலை, ஆரணி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
பொதுக்கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க நேற்று இரவு முதலமைச்சர் ஸ்டாலின் கார் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தார். மாவட்ட எல்லையில் அவருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். நேற்று இரவு அருணை கல்லூரி வளாகத்தில் தங்கினார்.
இந்நிலையில், திருவண்ணாமலை தேரடி வீதியில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் நடந்து சென்று திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இன்று காலை 8.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கார் மூலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் வந்தார்.
கோவில் மாடவீதி, கல்லை கடை சந்திப்பு அருகே உள்ள காய்கறி மார்க்கெட்டில் நடந்து சென்று வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். நடைபாதை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்குகள் சேகரித்தார். பின்னர் மாடவீதியில் நடந்து சென்று, சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் அந்த வழியாக வந்த பொதுமக்களிடம் முதலமைச்சர் வாக்குகள் கேட்டார்.
ஜோதி பூ மார்க்கெட் சென்று வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் கொடுத்து வாக்குகள் கேட்டார். மார்க்கெட்டில் இருந்த பொதுமக்கள் அவருடன் கைகுலுக்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். அப்போது அனைத்து வியாபாரிகள் சார்பில் மலர்மாலை, சால்வை அணிவித்து, மலர் தூவி வரவேற்றனர். நடந்து சென்ற முதலமைச்சர் மீது மலர் தூவினர். அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு சென்று கற்பூரம் விற்பனை செய்யும் பெண்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி ஓட்டு கேட்டார்.
ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்ட சிவனடியார்
அப்போது முதலமைச்சருடன் ஏராளமானோர் 'செல்பி' எடுத்துக்கொண்டனர். பள்ளி மாணவிகள் அவருடன் குழுவாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டு மகிழ்ச்சியில் உற்சாகமாக சென்றனர். கோவிலின் முன்பு இருந்த ஒரு சிவனடியார் முதல்வருடன் செல்பி எடுக்க முன் வந்தார். அவரை முதல்வர் அழைத்து தன்னுடன் நிற்க வைத்து செல்பி எடுத்துக் கொண்டார். இதனால் அந்த சிவனடியார் மகிழ்ச்சி அடைந்தார். கடைசியாக நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள டீ கடையில் ஸ்டாலின் இஞ்சி டீ குடித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.
இந்த பிரசாரத்தின்போது பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, திமுக வேட்பாளர் அண்ணாதுரை , நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu