மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அனைத்து கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், பொது அமைதி ஏற்படுத்திட வலியுறுத்தியும் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட அனைத்து கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இதனையொட்டி திருவண்ணாமலை திண்டிவனம் சாலை உள்ள உலக மாதா ஆலய வளாகத்திலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் கலவரம் தொடங்கி ஒன்றரை மாதமாகி விட்டது. கிட்டத்தட்ட 250 கிறிஸ்தவ தேவாலயங்கள், 17 இந்துக் கோவில்கள், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. 200 கிராமங்கள் தீவைத்துக் கொளுத்தப் பட்டிருக்கின்றன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொதுச்சொத்துக்கள் அழிக்கப் பட்டிருக்கின்றன. இறந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்திய பிரதமரும், உள்துறை அமைச்சரும் கர்நாடகத் தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டபோது தொடங்கியது மணிப்பூர் கலவரம். இத்தனை நடந்த பின்னும் இந்த விவகாரத்தில் பிரதமர் ஒரேயொரு வார்த்தைகூட பேசவில்லை. பிரதமரும் உள்துறை அமைச்சரும் உடனுக்குடன் இந்த விவகாரத்தில் அக்கறை காட்டியிருந்தால் இந்தக் கலவரம் அன்றே முடிந்திருக்கும். அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளில் மோடி அக்கறை காட்டவேண்டும் என இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மறைகோட்ட அதிபர் ஞானஜோதி தலைமை தாங்கினார். சுயாதீனத் திருச்சபைகளின் பேராயர் பன்னீர்செல்வம், ஆற்காடு லூத்தரன் திருச்சபை பேராயர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜான்ஜோசப் வரவேற்றார்.
இதில் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவி சங்கங்களின் கவுரவ செயலாளர் மூத்த வழக்கறிஞர் ஆர்.எல்.ராசாரியோ, தீண்டாமை ஒழிப்பு முன்னணியை சேர்ந்த செல்வம், மக்கள் அதிகார மேடை அமைப்பை சேர்ந்த ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வீரபத்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்வளவன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார். ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் திருவண்ணாமலை மறைக்கோட்ட துறவியர் பேரவை தலைவர் பீட்டர் ஜூலியன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu