திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
இரண்டாம் நாளான நேற்று கிரிவலம் வந்த பக்தர்களின் கூட்டம்
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் 7 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள்.
குறிப்பாக சித்ரா பௌர்ணமி, கார்த்திகை தீபம், பௌர்ணமி ஆகிய தினங்களில் திருவண்ணாமலையில் 15 லட்சத்திலிருந்து 40 லட்சத்துக்கு மேற்பட்ட உள்ளூர், வெளிமாவட்டம் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய வெளிமாநில பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள்.
அந்த வகையில் நேற்று முன்தினம் 23 ஆம் தேதி அதிகாலை 4:17 மணி முதல் 24 ஆம் தேதி நேற்று அதிகாலை 5:47 மணி வரை சித்ரா பௌர்ணமி கிரிவலம் நடைபெற நிலையில், சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்
இந்நிலையில், இரண்டாவது நாளான நேற்று அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.
அதைத்தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நடை அடைப்பு இல்லாமல், இரவு 10 மணி வரை தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜகோபுரம் வழியாக சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால், கோயில் வெளி பிரகாரத்தில் மாட வீதி வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
நேற்று காலை 11 மணிவரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதன்பிறகு, வெயில் சுட்டெரித்ததால், பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது. பின்னர், நேற்று மாலை வெயில் தணிந்ததும் மீண்டும் கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இரவு முழுவதும் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.
கடும் போக்குவரத்து பாதிப்பு
சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்காக வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்திருந்த போலீசார் நேற்று அதிகாலையிலேயே கிளம்பி அவர்களின் ஊர்களுக்கு சென்று விட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போலீஸ்காரர்களும் தேர்தல் பணிகள் மற்றும் அன்றாட பணிகளுக்காக சென்றதால் திருவண்ணாமலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்த சரியான முறையில் போலீசார் இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக பைபாஸ் சாலை மற்றும் மாட வீதிகளில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் தங்களுடைய வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு சென்றதால் பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பின்னர் திருவண்ணாமலை நகர போலீசார் உடனடியாக வரவழைக்கப்பட்டு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் இரவு வரை ஈடுபட்டனர்.
போக்குவரத்து போலீசார் பைபாஸ் சாலை துவங்கும் இடத்தில் நின்று திருவண்ணாமலை நகருக்கு வந்த வாகனங்களை விசாரித்து அண்ணாமலையார் கோவிலுக்கு செல்பவர்களையும் கிரிவலம் செல்லும் பக்தர்களையும் அங்கேயே தடுத்து நிறுத்தி தற்காலிக பேருந்து நிலையங்களில் அவர்களுடைய வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தந்து அவர்களை கோவிலுக்கும் கிரிவலத்திற்கும் அனுப்பி வைத்தனர்.
இதனால் நேற்று மாலைக்குப் பிறகு திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசல் குறைய தொடங்கியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu