பண்ணை குளம் அமைப்பதில் உலக சாதனை: பாராட்டு சான்றுகளை வழங்கிய அமைச்சர்
பாராட்டு சான்றிதழை மாவட்ட ஊராட்சிகள் இணை இயக்குனர் லட்சுமி நரசிம்மன் பெற்றுக்கொண்டார்
திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 12.8.2021 முதல் 10.9.2021 வரை 30 நாட்களில் 1,118 பண்ணை குளங்கள் நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. பருவமழை காலங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்ட இந்த பணி, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
உலக சாதனை நிகழ்த்த காரணமாக இருந்த அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் கலெக்டர் மு.பிரதாப் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், பாராட்டு சான்றுகளை வழங்கி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
சமூக நோக்கத்துடன் அதிகாரிகள் செயல்பட வேண்டும். அப்போதுதான், பயனுள்ள திட்டங்களை நிறைவேற்ற முடியும். கடந்த 35 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் கனமழை பெய்தது. பாலாற்றில் இருகரையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்தது.
பருவமழை காலங்களில் கிடைக்கும் நீரை சேமிக்க, இது போன்ற பண்ணை குளங்கள் அமைப்பது அவசியம். மாவட்டம் முழுவதும் 1,118 பண்ணை குளங்கள் நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் 19 கோடியில் உருவாக்கியதன் மூலம், இந்த மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கிணற்று பாசனத்தை நம்பியிருக்கிறது. எனவே, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம் என்ற நிலை உருவாக வேண்டும். நிலத்தடி நீரை சேமிப்பதுதான், அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் கடமையும், நன்மையுமாகும். வரும் தலைமுறைக்கு நாம் நன்மை செய்ய வேண்டும் என்றால் நிலத்தடி நீரை சேமிக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், உலக சாதனையை அங்கீகரிக்கும் சான்றுகளை, எலைட் வேல்டு ரெக்கார்ட், ஏசியன் ரெக்கார்ட், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்புகளின் சார்பில், அமைச்சர் எ.வ.வேலுவிடம் அளித்தனர். அதைத்தொடர்ந்து, பண்ணை குளங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருக்கு, பாராட்டு சான்றுகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஏஎஸ்பி கிரண்சுருதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu