திருவண்ணாமலை: லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளருக்கு ஒரு ஆண்டு சிறை

திருவண்ணாமலை: லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளருக்கு ஒரு ஆண்டு சிறை
X
திருவண்ணாமலையில், விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய பொறியாளருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரிய திருவண்ணாமலை தெற்கு கிராமிய அலுவலகத்தில் இளமின் பொறியாளராக சீனிவாசன் என்பவர் பணியாற்றினார். இவர், 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருவண்ணாமலை தென்மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவி என்பவர், தனது தாயின் விவசாய கிணற்றை ஆழப்படுத்த கிரேன் வைத்து மண் அள்ளுவதற்கு விவசாய மின் இணைப்பில், சேஞ்ச் ஓவர் ஸ்விட்ச் வைக்க அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.

இதற்கு பரிந்துரை செய்ய வேண்டுமெனில் லஞ்சமாக ரூ.2 ஆயிரத்து 100 தர வேண்டும், என இளமின் பொறியாளர் சீனிவாசன் வற்புறுத்தினார். இது குறித்து, ரவி திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். சீனிவாசன், ரவியிடம் இருந்து லஞ்சமாக கேட்ட ரூ.2 ஆயிரத்து 100-யை வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்தனர்.

இச்சம்பவம் குறித்த வழக்கு திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஈஸ்வரமூர்த்தி, குற்றம் சாட்டப்பட்ட இளமின்பொறியாளர் சீனிவாசனுக்கு ஒரு ஆண்டு சிறைதண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை