செய்யாறு அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

செய்யாறு அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட கோயில் உண்டியல்

செய்யாறு ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்யாறு ஆதிபராசக்தி அம்மன் கோயிலின் உண்டியலை கட்டிங் மிஷினில் உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஆற்காடு சாலையில், ஆதி பராசக்தி அம்மன் கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அர்ச்சகராக கார்த்திக் இருந்து வருகிறார்.

இந்தக் கோவிலில் வெள்ளிதோறும் சாமிகள் அலங்கரிக்கப்பட்டு சன்னிதானத்தின் உள்ளே சுற்றி வருவது மற்றும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல் மேல்மருவத்தூர் சென்று வரும் பக்தர்கள் செய்யாறில் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கும் வந்து செல்வது வழக்கமாக கொண்டு உள்ளார்கள். இந்தக் கோவிலில் நான்கு சன்னதிகள் அமைந்திருப்பதால் நான்கு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கோவிலை சுற்றி சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. அலாரமும் இத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு அர்ச்சகர் கார்த்திக் கோயிலை பூட்டிக்கொண்டு சென்று உள்ளார். நேற்று காலை 7 மணி அளவில் வழக்கம் போல் சாமிக்கு பூஜை செய்வதற்காக வெளியே கிரில் கேட்டை திறந்து ஆதிபராசக்தி அம்மன் கருவறைக்கு வந்தபோது கருவறை முன் இருக்கும் உண்டியல் திறந்து கிடந்தது. மேலும் அருகில் உள்ள விநாயகர் சன்னதியில் இருந்த உண்டியலும் திறந்த கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் முத்துசாமிக்கும், போலீசாருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. விரைந்து வந்தபோலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் நள்ளிரவு 1.30 மணி அளவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் கோவிலின் எதிரே உள்ள வீட்டின் வெளியே பைக்கை நிறுத்திவிட்டு கோயிலில் மடப்பள்ளி வழியாக பதுங்கி வந்து உண்டியல் அலாரம் இணைப்பை துண்டித்துள்ளனர். அம்மன் சன்னதி முன் இருந்த உண்டியலை சிறிய கட்டிங் மிசினால் உண்டியல் வாய் புறத்தில் உள்ள தகடை அறுத்தெடுத்து அதிலிருந்து காணிக்கை பணத்தை திருடி உள்ளார்கள். இரு உண்டியல்களும் இருந்து பணத்தை சுமார் அரை மணி நேரத்தில் திருடி சென்றுள்ளனர். பின்னர் எதிர் வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த பைக்கில் மூன்று நபர்கள் ஆற்காடு மார்க்கமாக சென்றுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் முத்துசாமி செய்யாறு போலீசில் புகார் அளித்தார், அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை கையகப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தக் கோயிலில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் காணிக்கை பணம் எண்ணுவது வழக்கம். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உண்டியல் காணிக்கை எண்ணிய போது ரூபாய் 95 ஆயிரம் இருந்ததாகவும் தற்போது காணிக்கையாக சுமார் 50,000 வரை இருந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலோடு எடுத்துச் சென்றது அருகில் உள்ள தெருவில் போட்டு உடைத்து உண்டியலில் இருந்த காணிக்கையை திருடிக் கொண்டு உண்டியலை அங்கேயே போட்டுவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

24 மணி நேரம் போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் உள்ள கோவிலில் நிகழ்ந்துள்ள திருட்டு சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story