வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர் அறிவுரை

வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர் அறிவுரை
X

மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற “என் கல்லூரிக்கனவு”  நிகழ்ச்சி

“என் கல்லூரிக்கனவு” நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர், நாம் வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என கூறினார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இரண்டாம் கட்டமாக “என் கல்லூரிக்கனவு” மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டல் கருத்தரங்கம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் நலத்துறை விடுதி மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பு, யு.பி.எஸ்.சி. தோ்வு மற்றும் ஐ.ஐ.டி. தோ்வு போன்றவற்றில் எளிதில் வெற்றி பெறுவது குறித்து விளக்குவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

உயர்கல்வி பயிலவும் வேலை வாய்ப்புகள் பெற்றிடவும் ஏராளமான வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளன . இந்த வாய்ப்புகளை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்துகிறோமா, வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கமாகும்.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் உங்களுக்கு அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள் மிகப்பெரிய உன்னதமான ஒரு காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் நீங்கள் கடுமையாக திட்டமிட்டு முயன்றால் வாழ்க்கையில் முன்னேற முடியும். நமக்கான கால நிலை எது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நாம் என்னவாக வேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம்.

நாம் வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். போட்டித் தேர்வுகள் மூலம் பல்வேறு பதவிகளை அடையலாம். மேலும் உயர்கல்வி பயில மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உங்களுக்கு விளக்கிக் கூற உள்ளார்கள். மேலும் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பிக்கும் முறைகள், பல்வேறு துறைகளில் உள்ள பட்டம் பட்டய பாடப்பிரிவுகள், விரைவில் அரசு மற்றும் தனியார் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் உங்களுக்கு எடுத்துரைப்பர்.

தொழில்கள் தொடங்க வங்கிகள் கடனுதவி அளிக்கிறது. அதனைப் பயன்படுத்தி கடுமையாக உழைத்தால் தொழில் அதிபர்களாக மாறலாம். புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து காப்புரிமை பெறுவதன் மூலம் அதிக வருமானம் ஈட்டலாம் .போட்டி தேர்வு மட்டும் இன்றி தொழில் முனைவோர் வேளாண்மை மற்றும் பல துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் உங்களுக்கு காத்திருக்கிறது.

வாழ்க்கையில் முன்னேறியவர்கள் எல்லாம் ஒரே நாள் ஒரே இரவில் முன்னேறியவர்கள் அல்ல. கடுமையாக உழைத்து திட்டமிட்டு அந்தத் திட்டத்தை செயல்படுத்தி முன்னேறினார்கள், வெற்றி கண்டார்கள். தோல்விகளால் துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார்கள்.

தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து திருத்தங்களை செய்தார்கள் வாழ்க்கையில் முன்னேறவும் நம் இலக்கை அடையவும் கவனம் சிதறாமல் பாடுபட வேண்டும் என கூறினார்

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தனது சந்தேகங்களை கேட்டு அறிந்தனர். அதில் சிறந்த கேள்விகளை கேட்ட மாணவ மாணவிகளுக்கு ஆட்சியர் புத்தகங்களை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாந்தி, தாட்கோ மாவட்ட மேலாளர் ஏழுமலை, தனி வட்டாட்சியர்கள் மற்றும் உயர் கல்வி வழிகாட்டுதல் பயிற்சியாளர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் ,ஆசிரியர்கள் ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil