திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு தடை, பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார்
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் சிறப்பு பெற்றது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் பாதையில் கிரிவலம் செல்வார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வந்த பவுர்ணமியில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 7.19 மணிக்கு தொடங்கி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.17 மணிக்கு நிறைவடைகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் உள்ளதால் இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டு பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.
இதனால் நேற்று இரவு கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் கிரிவலம் செல்லாமல் தடுக்க விடிய, விடிய போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் மன வேதனை அடைந்து புலம்பிய படி பக்தர்கள் திரும்பி சென்றனர்.
சிலர் போலீசார் சொல்வதையும் பொருட்படுத்தாமல் வேகமாக நடந்து கிரிவலப்பாதையில் சென்றனர். சிலர் அருகில் கிராமத்தின் வழியாக மாற்று பாதையில் கிரிவலப்பாதைக்கு வந்து தங்களது கிரிவலத்தை தொடர்ந்தனர். கிரிவலப்பாதையில் போலீசார் மூலம் ஒலிபெருக்கி மூலம் கிரிவலத்திற்கு தடை குறித்து தொடர்ந்து அறிவித்தவாறு இருந்தனர். போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu