அருணாச்சலேஸ்வரர் கோயில் தேர்கள் சீரமைக்கும் பணி தொடக்கம்

அருணாச்சலேஸ்வரர் கோயில் தேர்கள்  சீரமைக்கும் பணி  தொடக்கம்
X

அகற்றப்பட்ட தேர் தகடுகள்.

அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வாகனங்கள் பஞ்சமூர்த்தி தேர்கள் சீரமைக்கும் பணி துவங்கியது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் வலம் வரும் வாகனங்களை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

நினைத்தாலே முக்தி தரும் தலம் என போற்றப்படும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப பெருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவ. 14-ம் தேதி இரவு தொடங்குகிறது. பின்னர், அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் நவ. 17-ம் தேதி காலை கொடியேற்றப்பட்டதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமாகிறது.

காலை மற்றும் இரவு நேரத்தில் பல்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி மாட வீதியில் வலம் வரவுள்ளனர். முக்கிய நிகழ்வாக, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் நவ. 26-ம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படவுள்ளன. இந்நிலையில், கார்த்திகை தீப திருவிழா பணிகளை மேற்கொள்ள, ராஜகோபுரம் அருகே கடந்த செப். 21-ம் தேதி பந்தக்கால் நடப்பட்டது.

இதையடுத்து, பஞ்சமூர்த்திகள் வலம் வரும் வாகனங்களை சீரமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடை பெறுகிறது. மூஷிக வாகனம், நாக வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்து, வர்ணம் பூசப்படுகிறது. இப்பணிகளை தொடர்ந்து, தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய தேர் உட்பட 5 ரதங்களை சீரமைக்கும் பணியில் பொறியியல் வல்லுநர்கள் ஈடுபடவுள்ளனர்.

இதற்காக தேரடி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு தேர்களின் பாதுகாப்பிற்காக மூடப்பட்டு இருந்த இரும்பு தகடுகள் நேற்று அகற்றப்பட்டன. தொடர்ந்து தேர்களின் சக்கரங்கள், அச்சு போன்ற பாகங்கள் உறுதியாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. உறுதி குறைந்து உள்ள பாகங்களை மாற்றவும், சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேர்கள் சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் பொதுப்பணித்துறை (கட்டுமானம்) அதிகாரிகள் தேர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து அதன் உறுதித் தன்மை குறித்து சான்று அளிக்க உள்ளனர்.

தீபத்திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து சிறப்பு அலங்காரம் செய்யப்படும். திருக்கல்யாண மண்டபத்தில் பல்வேறு வண்ண துணிகள் மற்றும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
why is ai important to the future