ஆன்லைனில் பட்டாசு வாங்குபவரா நீங்கள்! இதைக் கட்டாயம் படியுங்க..

ஆன்லைனில் பட்டாசு வாங்குபவரா நீங்கள்! இதைக் கட்டாயம் படியுங்க..
X

பைல் படம்

பட்டாசை ஆன்லைனில் விற்பதாக கூறி மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடும் மிக முக்கியமான இந்து பண்டிகை தீபாவளி. மக்கள் ஏற்கனவே தங்கள் வீடுகளை சுத்தம் செய்வது தொடங்கி, புதிய ஆடைகள் வாங்குவது, பட்டாசுகள் வாங்குவது, இனிப்புகள் - பலகாரங்கள் செய்வதற்கான பொருட்கள் வாங்குவது என தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

குழந்தைகள், சிறுவர்கள் இருக்கும் வீடுகளில் இப்போதே பட்டாசு சத்தங்களும் கேட்கத் தொடங்கிவிட்டன. பலர், ஆன்லைன் வாயிலாகவும், பட்டாசு ஆர்டர் செய்துள்ளனர். இந்நிலையில், ஆன்லைனில் பட்டாசு வாங்குபவர்களைக் குறி வைத்து ஏராளமான மோசடி கும்பல்களும் களமிறங்கியுள்ளன. நம்ப முடியாத விலையில் பட்டாசு தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, பண மோசடி செய்யும் கும்பல்கள் பெருகியுள்ளன.

நவீன தொழில்நுட்பத்தில் பொதுமக்களிடம் ஆன்லைனில் மோசடியில் ஈடுபடும் கும்பல் தொடர்ந்து தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் ஆங்காங்கே ஆன்லைன் மோசடி நடைபெறுகிறது

சீசனுக்கு சீசன் உருமாறும் ஃப்ராடு கும்பல் இப்போது தீபாவளி பட்டாசு விற்பனை ரூபத்தில் வந்துள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், பண்டிகை நேரத்தில் பரிசு பொருட்கள் விளம்பரம் தொடர்பாக பொதுமக்கள் நன்கு ஆராய்ந்து விசாரித்து கொண்டு ஏமாறாமல் இருக்க வேண்டும்.

நம்ப முடியாத விலையில் பட்டாசுகளை வழங்குவதாக உறுதியளித்து, மோசடி செய்வதற்கு போலி இணையதளங்களை உருவாக்கி நம்ப முடியாத விலையில் பட்டாசுகளை வழங்குவதாகவும் உறுதியளித்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். தங்களது எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசி வங்கி கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களின் விவரங்களை கேட்டால் கொடுக்க வேண்டாம்.

மேலும் செல்போன் எண்ணுக்கு ரகசிய குறியீடு எண்ணை அனுப்பியிருப்பதாகவும், அது பற்றி கேட்டாலும் கூற வேண்டாம்.

இதேபோல் கடன் செயலியில் கடன் பெற வேண்டாம். இதுபோன்று ஆன்லைனில் மோசடி செய்து தங்களது பணத்தை எடுத்தால் உடனடியாக 1930 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம.

அவ்வாறு செய்தால் மர்ம ஆசாமிகளின் வங்கி கணக்கிற்கு பணம் பரிமாறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் இழந்த பணத்தையும் மீட்க வாய்ப்பு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!