திருவண்ணாமலை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்
திருவண்ணாமலை நகரில் 2 சார் பதிவாளர் அலுவலகங்கள் (பத்திர பதிவு அலுவலகம்) இயங்கி வருகிறது.
வேலூர் ரோட்டில் இணை 1 பதிவாளர் அலுவலகமும் வேட்டவலம் ரோடில் இணை 2 பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
திருவண்ணாமலை-வேட்டவலம் சாலையில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் திருவண்ணாமலை இணை சாா் -பதிவாளா் அலுவலகம் எண்-2 தற்காலிகமாக இயங்கி வருகிறது.
இவற்றில் இணை சாா் -பதிவாளா் அலுவலகம் எண்-2இல் திங்கள்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
மாலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை நடைபெற்ற இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.76,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை வட்டங்கள் தெரிவித்தன. குறிப்பாக இந்த இணையதள பண பரிவர்த்தனை மூலம் லட்சக்கணக்கிலான தொகை கணக்கில் வராமல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சார் பதிவாளர் குமரகுருவிடம் சோதனை மற்றும் விசாரணை நடைபெற்றது. அதேபோன்று பத்திர பதிவிற்கு வந்தவர்களும் விசாரிக்கப்பட்டனர்.
எண்-1 அலுவலகத்தில் திடீா் சோதனை.
இந்த நிலையில், நேற்று மாலை புதன்கிழமை ஈசான்ய மைதானம் அருகேயுள்ள இணை சாா்-பதிவாளா் அலுவலகம் எண்-1இல் பிற்பகல் 3 மணிக்கு ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகன், ஆய்வாளா் மைதிலி, உதவி ஆய்வாளா் கோபிநாத் மற்றும் குழுவினா் திடீரென உள்ளே சென்றனா்.
அலுவலக ஊழியா்கள், பத்திரப்பதிவு செய்ய வந்திருந்த பத்திர எழுத்தா்கள், வாடிக்கையாளா்கள் என அனைவரிடமும் சோதனை நடைபெற்றது. இதில், கணக்கில் வராத ரூ. ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், ரூ.10 லட்சம் வரையிலான லஞ்சப் பணம் கூகுள் பே செயலி மூலம் சாா்-பதிவாளா் அலுவலக ஊழியா்களுக்கு பத்திர எழுத்தா்கள் மற்றும் இடைத்தரகா்கள் மூலம் அனுப்பியதாகவும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதற்கான ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் இரவு முழுவதும் போலீஸாா் ஈடுபட்டனா்.
மேலும் பத்திர பதிவுக்காக வந்திருந்த பொதுமக்கள் வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்து அதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்சாரை பார்த்ததும் அலுவலகத்தில் இருந்த ஒருவர் ஜன்னல் வழியாக பணத்தை எடுத்து வீசினாராம். இதை பார்த்த போலீசார் அந்த பணத்தை கைப்பற்றியுள்ளனர். பணத்தை வீசிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனைச் சம்பவத்தால் திருவண்ணாமலை நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அதிரடி
சென்ற மாதம் திருவண்ணாமலை நகராட்சியில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஆய்வாளர், அதுபோலவே சமீபத்தில் ஆரணி வட்டாட்சியர், கலசப்பாக்கம் பகுதியில் லஞ்சம் கேட்ட விஏஓ, செங்கம் பகுதியில் வருவாய் ஆய்வாளர், இணை சாா் -பதிவாளா் அலுவலகம் எண்-2 , 1 என தொடர்ச்சியாக அதிகாரிகள் சிக்கிக் கொண்டு வருவதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu