திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

கிரிவலப் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பௌர்ணமி தினத்திற்குள் சரி செய்ய வேண்டும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
X

பழுதடைந்து பூமியை நோக்கி பார்க்கும் கேமராக்கள்.

மலையே மகேசன் என போற்றப்படும் திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர்.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள்.

திருவண்ணாமலை கோயில் சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது. 14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட மலையை பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர்.

இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அதன்படி வருகின்ற வியாழக்கிழமை 28 ஆம் தேதி மாலை 6:46 மணியிலிருந்து வெள்ளிக்கிழமை 29 ஆம் தேதி மாலை 4 34 மணி வரை கிரிவலம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பௌர்ணமியை முன்னிட்டும் தொடர் அரசு விடுமுறை காரணமாகவும் அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்பதால் அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


கிரிவலப் பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பழுது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக வணங்கி 14 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்களும் மற்ற நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளிநாடு வெளி மாநிலம் வெளி மாவட்டம் உள்ளூர் பக்தர்கள் என பகல் மற்றும் இரவு வேலைகளிலும் கிரிவலம் செல்கின்றனர்.

கிரிவல பாதையில் அவ்வப்போது பல்வேறு குற்ற செயல்கள் நடைபெற்று வருவதை தொடர்ந்து 8 இடங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

பக்தர்களிடம், வழிப்பறி மற்றும் நூதன மோசடி என்பது தொடர்கிறது. வெளியூர்களில் குற்றச்செயலை செய்துவிட்டு, ‘சாது’க்கள் வேடத்தில் கிரிவலப் பாதையில் குற்றவாளிகள் தஞ்சமடைகின்றனர். இதேபோல், கிரிவலப் பாதையில் கஞ்சா மற்றும் சாராயம் விற்பனையும் நடைபெறுகிறது.

கிரிவலப் பாதையில் நடைபெறும் குற்றச்செயலை கண்காணித்து தடுக்க, காவல் துறை அறிவுரையின்பேரில் இந்து சமய அறநிலையத் துறை (கோயில் நிர்வாகம்) சார்பில் சுமார் 130 கேமராக்களை பொருத்தியுள்ளன. பவுர்ணமி கிரிவல நாட்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளிகளின் நடமாட்டமும் எளிதாக அடையாளம் காணப்பட்டன. காவல் துறையின் விசாரணைக்கும் மற்றும் கிரிவலப் பக்தர்களின் பாதுகாப்புக்கும் அரணாக இருந்தன.

கடந்த சில மாதங்களாகவே இந்த கேமராக்கள் பராமரிப்பு இன்றி பொருத்தப்பட்ட திசையில் இருந்து மாறியும் பழுதடைந்தும் கிடக்கிறது. தற்போது வெறும் 10 கேமராக்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிரிவலப் பாதையில் பொருத்தப்பட்டுள்ள இந்த 130 கேமராக்களையும் பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இந்த கேமராக்களை ஏன் பராமரிக்கவில்லை என்பது குறித்து தெரியவில்லை.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும் போது , கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள கம்பங்கள் மீது லாரிகள் மோதியதில் சேதம் அடைந்துள்ளன .மேலும் பல இடங்களில் கேமராக்களின் முகப்பு பகுதி பல கோணங்களில் உள்ளன. இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.

இதனை பராமரிக்கும் பணி தங்களிடம் இல்லை என போலீசாரும் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது கேமராக்கள் நல்ல நிலையில் இருந்தபோது குற்றச் செயல்கள் குறைவாக இருந்தது . தற்போது கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்து உள்ளதால் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு வசதியாக உள்ளது. இந்து சமய அறநிலைத்துறையினர் இதற்காக தனி ஊழியர்கள் நியமனம் செய்து கண்காணிப்பு கேமராக்களை கண்காணிப்பு செய்ய வேண்டும் . அப்போதுதான் அச்சம் இல்லாமல் கிரிவலம் செல்ல முடியும். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அவர்களும் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் , தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 26 Sep 2023 12:13 PM GMT

Related News