ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி வாகை சூடும்: அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்
நலத்திட்ட உதவிகளை வழங்கிய அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் அதிமுக நிர்வாகிகள்.
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் நாராயணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
தொடர்ந்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவை நாங்கள் எங்களுடைய குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தினார். அதனை மக்கள் அனைவரும் அறிந்தது. ஆனால் தற்போது பொய் வாக்குறுதிகளை கண்டு ஏமாந்து விட்டோமே என்றும், தி.மு.க. அரசை எப்போது வீட்டிற்கு அனுப்புவது என்றும் மக்கள் ஏக்கத்தோடு உள்ளனர்.
தற்போது பாலியல் பலாத்காரம், வன்முறைகள், வரி சுமைகள் அத்தனையும் மக்களால் தாங்கி கொள்ள முடியாத சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கான எண்ணங்களில் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எங்களுடைய தலைமை கழகமும், இடைக்கால பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் நல்ல முடிவு எடுத்து இந்த கால கட்டத்தில் நல்ல வேட்பாளரை அறிவித்தால் நிச்சயமாக அ.தி.மு.க. ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடும்.
சசிகலா அ.தி.மு.க. தலைமையை சந்திக்க உள்ளதாக கேலிகூத்தாக சொல்லி கொண்டு இருக்கிறார். நிச்சயமாக அது நடைபெறுவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை. தலைமை கழகத்தை சூறையாடிவர்களை மீண்டும் இந்த கட்சியில் சேர்ப்பது என்றால் கட்சி தொண்டர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் ,நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu