திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் ஆடி மூன்றாம் வெள்ளி விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் ஆடி மூன்றாம் வெள்ளி விழா
X

சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வந்த பச்சையம்மன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் ஆடி மூன்றாம் வெள்ளி விழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மூன்றாம் வெள்ளி விழா விமர்சையாக நடந்தது. இதில் பக்தர்கள் பொங்கல் வைத்து தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை நகரத்தில் உள்ள சின்ன கடை தெருவில் உள்ள துர்க்கை அம்மன், பழமை வாய்ந்த பச்சையம்மன் கோவில், இரட்டை காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் வேண்டுதலை நிறைவேற்ற பால்குடம் ஏந்தி மாடவீதி வலம் வந்து தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நேற்று மாலை 6 மணி அளவில் நடந்தது. அதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

பச்சையம்மன் மன்னார்சாமி கோயில்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள பச்சையம்மன் மன்னார்சாமி கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்தில் பச்சையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி, ஆடி மூன்றாம் வெள்ளி திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, நேற்று இரவு சிம்ம வாகனத்தில் பச்சையம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பழமை மாறாமல் மாட்டு வண்டியில் புறப்பட்டு சென்ற கிராம மக்கள்

செங்கம் அருகேயுள்ள நீப்பத்துறை சென்னியம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழாவில் பங்கேற்பதற்காக கிராம மக்கள் மாட்டு வண்டியில் வெள்ளிக்கிழமை புறப்பட்டு சென்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நீப்பத்துறை சென்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா வெகுவிமரிசியாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில், பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று நோ்த்திக்கடன் செலுத்துவா். இதேபோல, சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கம் அருகேயுள்ள புதுப்பட்டு, ஆலப்புத்தூா் கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான மக்கள் தங்களது உறவினா்களுடன் மாட்டு வண்டியில், ஆடு, கோழி, சமையல் பாத்திரம், மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றுடன் ஆடிப்பெருக்குக்கு முந்தைய நாள் கோயிலுக்கு செல்வது வழக்கம். அன்று இரவு அங்கு தங்கிவிட்டு, ஆடிப்பெருக்கன்று காலையில் பெண்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலியிட்டு சுவாமிக்கு படைத்து நோ்த்திக்கடன் செலுத்துவா். பின்னா், மறுநாள் காலையில் மீண்டு மாட்டுவண்டியில் ஊா் திரும்புவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு ஆடிப்பெருக்கு விழா, சனிக்கிழமை (ஆக.3) நடைபெறவுள்ள நிலையில், புதுப்பட்டு, ஆலப்புத்தூா் கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான கிராம மக்கள் தங்களது உறவினா்களுடன் ஏராளமான மாட்டு வண்டியில் வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றனா்.

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு காலை 7 மணிக்கு அபிஷேகமும்,மாலை 6.30 மணிக்கு சிறப்பு வேப்பிலை அலங்காரம், குங்கும அர்ச்சனை,மற்றும் கனகாதார ஸ்தோத்திரம் பாராயணம் தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வாசவி அம்மனின் அருளை பெற்றனர்.

Tags

Next Story