இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு விநியோகித்தால் நடவடிக்கை

இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு விநியோகித்தால் நடவடிக்கை
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு விநியோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-ன் கீழ் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய அரசு திட்டம் நுண்ணீர்பாசனத் திட்டம்) வடமலை, வேளாண்மை உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், உர ஆய்வாளர்களான வேளாண்மை அலுவலர்கள் தங்கள் வட்டாரங்களில் உள்ள அனைத்து உர விற்பனை நிலையங்கள், உரக்கிடங்குகள், கலப்பு உர நிறுவனங்களை முறையாக ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கையினை வேளாண்மை இணை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.

உர விற்பனையாளர்கள் மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலமாகவே விவசாயிகளின் சாகுபடி பரப்பிற்கு தகுந்தவாறு உரங்களை பரிந்துரை செய்து விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். தேவைக்கு அதிகமான உரங்களை பரிந்துரை செய்யக் கூடாது.

விவசாயிகள் விரும்பாத இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது தெரியவந்தால் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் விதிகளை மீறிய செயலர்களுக்கு உர உரிமம் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் வேளாண்மை இணை இயக்குனருக்கு பரிந்துரை செய்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் உர நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்களுக்கு வினியோகம் செய்ய மாத வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட உர இலக்கினை விடுபாடு இன்றி தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விநியோகம் செய்திட வேண்டும். உரமூட்டையில் குறிப்பிட்டு உள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். உரிய ஆவணங்களின்றி உரம் விற்பனை செய்தாலும் இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு வினியோகம் செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் அனைத்து வட்டார உர ஆய்வாளர்கள், டான்பெட் மேலாளர், கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பதிவாளர், கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள், மொத்த உர விற்பனையாளர்கள் மற்றும் உர நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story