காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
திருவண்ணாமலையில் காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத 53 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது
HIGHLIGHTS

பைல் படம்
திருவண்ணாமலையில் காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது
அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியன்று அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டது. தனியார் நிறுவனங்களும் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கவேண்டும், அத்தியாவசிய பணிகளுக்காக திறக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு அன்றையை தினம் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்பது அரசு விதிமுறை. இதனை மீறும் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்பது விதிமுறையாகும்.
அந்த வகையில், திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் ,போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளான நேற்று காந்தி ஜெயந்தி தினத்தன்று சட்டப்படி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய பண்டிகை விடுமுறைகள் சட்டம் 1958 , உணவு நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகள் 1958 , போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டம் 1961 மற்றும் விதிகளின் கீழ் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமல் மாற்று விடுமுறை அளிக்காமல் அதற்கான முறையான அறிவிப்பு அளித்து அனுமதி பெறாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய 67 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர் .
இதில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 28 நிறுவனங்களிலும் உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 25 நிறுவனங்களிலும் என மொத்தம் 53 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அந்நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், திருவண்ணாமலை ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்று அரசு ஒப்பந்த பணிகள் மற்றும் இதர பணிகளில் குழந்தைகள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தவில்லை என தீர்மானம் நிறைவேற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சட்டமுறை எடையளவு சட்டம்- 2009 மற்றும் சட்டமுறை எடையளவு விதிகள் 2011 ஆகிய சட்டங்களின் கீழ் நெல், தேயிலை கொள்முதல் நிலையங்கள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், சாலையோர கடைகள் மற்றும் சந்தைகள் அனைத்து கடைகள் நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முரண்பாடு கண்டறியப்பட்ட நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.