திருவண்ணாமலை அருகே டிரான்ஸ்பார்மரில் பள்ளி பேருந்து மோதி விபத்து

திருவண்ணாமலை அருகே டிரான்ஸ்பார்மரில் பள்ளி பேருந்து மோதி விபத்து
X

மின்சார டிரான்ஸ்பார்மரில் மோதிய பள்ளி பேருந்து

திருவண்ணாமலை அருகே மின்சார ட்ரான்ஸ்பார்மர் மீது பள்ளி பேருந்து மோதியதில் ஏழு மாணவர்கள் காயம் அடைந்தனர்

திருவண்ணாமலை அருகே மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர் மீது பள்ளி பேருந்து மோதியதில் ஏழு மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது . அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருவண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் ரோட்டில் ஆலத்தூர் கிராமத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இன்று காலை அந்த பள்ளியின் பேருந்து கிராமங்களுக்கு சென்று மாணவ மாணவிகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்தப் பேருந்தில் 30 மாணவர்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அரிதாரி மங்கலம் கிராமத்தில் சென்றபோது சாலையோரம் உள்ள மின்சார ட்ரான்ஸ்பார்மர் மீது பள்ளி பேருந்து திடீரென நிலை தடுமாறி மோதியது.

இதனால் பள்ளி பேருந்து குலுங்கியதால் அதிர்ச்சியில் பேருந்தில் இருந்த மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் வீழ்ந்தனர். இதில் ஏழு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பிறகு வேறு பேருந்தில் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.


விபத்து குறித்து கேள்விப்பட்டதும் பெற்றோர்கள் அந்த இடத்திற்கு ஓடோடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தனது குழந்தைகளை பார்த்ததும் தாய்மார்கள் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டனர் .

மின்சாரத்துறையினர் உடனடியாக வந்து மின் இணைப்புகளை துண்டித்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

விபத்து நடந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியை எடுத்த ஒப்பந்தக்காரர் ஜல்லி கொட்டி விட்டு தார் போடாமல் சென்று விட்டதாகவும் , பல மாதங்களாக இதே நிலை நீடிப்பதாகவும் இது பற்றிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லியும் அவர்கள் கண்டும் காணாமல் இருந்து விட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இதன் காரணமாகவே ஜல்லி ரோட்டில் சென்ற பள்ளி பேருந்து சாலையில் சறுக்கி ட்ரான்ஸ்பார்மர் மீது மோதியதாகவும் அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர். மோதிய வேகத்தில் டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போனதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது , இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சாலை பணியை சரிவர முடிக்காத ஒப்பந்ததாரர் மீதும் இதைக் கண்டு கொள்ளாத அதிகாரிகள் மீதும் கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
அட இது தெரியமா போச்சே !!ஆரஞ்சு பழம் , கடல் உணவுல தைராய்டு பிரச்சனைய சரி பண்ணிரலாமா !!! | Superfoods that will help in managing thyroid levels in tamil