அதிகமான பண்ணை குளங்கள் உருவாக்கி திருவண்ணாமலை மாவட்டம் உலக சாதனை
உலக சாதனை சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மற்றும் கூடுதல் ஆட்சியர் பிரதாப் ஆகியோரிடம் வழங்கப்பட்டன.
பூமித்தாய்க்கும். சுற்றுச் சூழலுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் நோக்கத்திலும், பசுமை மற்றும் இயற்கையோடு மனித குலம் ஒன்றி வாழ, வீணாகும் மழை நீரினை 100% நமக்கு தேவையான விதத்தில் எவ்வாறு உபயோகிக்கலாம் என்கிற விழிப்புணர்வுக்காகவும் தமிழ்நாடு அரசின் உறுதுணையோடு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மாபெரும் உலக சாதனை படைத்திருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் கோடை காலத்தில் மிகுந்த வறட்சி, குடிநீர் பற்றாக்குறை, உழவின்மை என பல சிக்கல்களை சந்தித்து வருகின்றது. இதற்கு தீர்வு காணும் வகையில் மழை நீரினை தேக்கி வைத்து உபயோகிக்க திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பணியாளர்களை ஈடுபடுத்தி மாவட்டம் முழுவதும் 1121 பண்ணைக்குளங்களை அமைத்து "முப்பது நாட்களில் பல்வேறு இடங்களில் அதிகமான பண்ணைக்குளங்கள் உருவாக்கிய உலக சாதனை" எனும் மாபெரும் உலக சாதனையை படைத்துள்ளது
இந்த மகத்தான உலக சாதனையை அமைச்சர் எ.வ.வேலு. மற்றும் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலையில் 12.08.2021 தேதியன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்துவக்கி வைத்தார். மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப் கண்காணிப்பில் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி வளர்ச்சி முகமையின் உதவியோடு மாவட்டம் முழுவதும் தேர்தெடுக்கப்பட்ட 541 பஞ்சாயத்துக்களில், அந்தந்த பகுதி விவசாயிகளின் வேளாண் நிலத்தில், அவர்களின் ஒப்புதலோடு 1121 பண்ணைக்குளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 30 நாட்களில் 1121 பண்ணைக்குளங்களும் உருவாக்கப்பட்டு அந்தந்த விவசாயிகளின் வசம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது.
ஒவ்வொரு பண்ணைக்குளமும் 72 அடி நீளம், 36 அடி அகலம், 5 அடி ஆழம் எனும் அளவில் 3,64,000 லிட்டர் மழைநீரினை தேக்கி வைக்கும் அளவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பண்ணைக்குளங்களின் மூலம் 40.69 கோடி லிட்டர் தண்ணீரினை தேக்கி வைக்க இயலும். மழைக்காலத்தில் வீணாக ஆவியாகும் மழை நீரினை இந்த பண்ணைக் குளங்களில் தேக்கி வைத்தால் குடிதண்ணீர் தேவையில் தன்னிறைவடைந்த பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் மாறிவிடும். நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கும். விவசாயிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இந்த பண்ணைக்குட்டை விவசாயத்திற்கு மட்டுமின்றி. விவசாயிகள் விருப்பப்பட்டால், மீன் வளத்துறையின் மூலமாக மீன்கள் வளர்த்து, அதிலும் வருமானம் கிடைக்கும் வண்ணம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேறு எந்த மாவட்டமும் செய்திடாத இந்தப் புதிய முயற்சியை எலைட் வோல்ட் ரெக்கார்ட்ஸ் (USA-LLC) உலக சாதனை நிறுவனத்தின் ஏஷியா பசிஃபிக் அம்பாஸிடர் கார்த்திகேயன் ஜவஹர், மற்றும் சீனியர் அட்ஜுடிகேட்டர் அமீத் K.ஹிங்கரோனி ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி (UAE) நிறுவனத்தின் இந்தியன் அம்பாஸிடர் Dr. A.K.செந்தில்குமார் மற்றும் சீனியர் அட்ஜுடிகேட்டர் B.சிவக்குமரன், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் அஸோஸியேட் எடிட்டர் .P.ஜெகன்நாதன் மற்றும் ரெக்கார்ட்ஸ் மேனேஜர் K.S.கார்த்திக் கனகராஜீ, தமிழன் புக் ஆப்ஃ ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சீனியர் ரெக்கார்ட்ஸ் மேனேஜர் Dr. B.பாலசுப்பரமணியன் நேரில் ஆய்வு செய்து "30 நாட்களில் பல்வேறு இடங்களில் அதிகமான பண்ணைக்குளங்கள் உருவாக்கிய உலக சாதனை" (Most Farm Ponds Created at Multiple Locations in 30 days) என அங்கீகாரம் வழங்கி அதற்கான உலக சாதனை சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மற்றும் கூடுதல் ஆட்சியர் பிரதாப் ஆகியோரிடம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
மாவட்ட கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி. பயிற்சி ஆட்சியர் கட்டா ரவி தேஜா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முருகன், துணை இயக்குநர் தோட்டக்கலைத்ததுறை சிதம்பரம் ஆகியோர் உடனிருந்தனர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாதனை நிகழ்வு திருவண்ணாமலை மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். உலக வரலாற்றிலேயே முதன்முறையாக நிகழ்த்தப்பட்ட மாபெரும் மக்கள் சேவை நிகழ்வு என்பதாலும், மற்ற மாவட்டங்களுக்கும் இந்த தன்னிறைவு கிடைக்க வேண்டும் என்றுகலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu