கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது  நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை
X

திருவண்ணாமலை எஸ்பி பவன்குமார் 

கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலை குறைக்கும் நோக்கத்திலும் மற்றும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ளபடி, 10.01.2022 வரை சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட வேண்டும்.

மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை. அனைத்து வகையான பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடியாக வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களை பொருத்தவரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள் மற்றும் தங்கும் விடுதிகள் துணிக்கடைகள் , நகைக்கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள், அழகு நிலையங்கள் சலூன் போன்ற இடங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்ய அனுமதி. நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து வகையான அரங்குகளிலும் அனுமதி அளிக்கப்பட்ட இருக்கைகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

கடைகளில் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான் வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முக கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேற்கூறிய விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவும், தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

Tags

Next Story