திருவண்ணாமலை சுற்றுலா தலங்களுக்கு நாளை முதல் அனுமதி
அறிவியல் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதால் சுத்தம் செய்யும் பணி இன்று தீவிரமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணை தமிழகத்தில் பெரிய அணைகளில் முக்கியமானதாகும். இந்த அணையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களும், இயற்கையான சூழலும் சுற்றுலா வருபவர்களுக்கு மகிழ்வூட்டுவனவாக உள்ளன. கொரனோ பரவல் காரணமாக பல மாதங்களாக சாத்தனூர் அணையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் போன்றவை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
அதன்படி சாத்தனூர் அணை பூங்காவில் பல மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பூங்கா பகுதியில் சுத்தம் செய்யும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதேபோல் மிருகண்டா அணை, குப்பநத்தம் அணை பகுதியிலும் நாளை முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே வேங்கிக்கால் ஏரிக்கரையில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பள்ளி மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்து அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு உபகரணங்களும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுதை கழிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்களும், உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு தேவையான உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் பல மாதங்களாக இந்த பூங்கா பொதுமக்கள் பயன்பாடு இன்றி மூடி கிடப்பதால் புல் செடிகள் வளர்ந்து அசுத்தமாக காணப்பட்டது. நாளை முதல் இந்த பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதால் சுத்தம் செய்யும் பணி இன்று தீவிரமாக நடைபெற்றது.
அதுபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய பூங்காக்கள் மற்றும் அணைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu