திருவண்ணாமலை மாவட்டத்தில் 121 புதிய செல்போன் டவர்கள்: எம்பி அண்ணாதுரை
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலை, தண்டராம்பட்டு ,செங்கம்,உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. எனவே அனைத்து கிராமங்களிலும் செல்போன் சேவை மற்றும் இணைய தள சேவையை மேம்படுத்த வேண்டும் என திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை மக்களவையில் வலியுறுத்தியிருந்தார். மேலும் தொலைத் தொடர்புத் துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் மாவட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுத்து தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் பிஎஸ்என்எல் சார்பில் 54 டவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலம் 67 டவர்கள் உட்பட 121 அதிக திறனுள்ள புதிய டவர்கள் அமைக்கவும் , பிஎஸ்என்எல் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 82 டவர்கள் சேவையை 4ஜி சேவையாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இப் பணிகள் குறித்து தொலைத் தொடர்புத் துறை துணைத் தலைமை இயக்குனர் ராதா, இயக்குனர் ராஜசேகரன், பிஎஸ்என்எல் பொதுமேலாளர் ரமேஷ்குமார், கோட்ட பொறியாளர் பாபு ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர். பின்பு எம்பி அண்ணாதுரையை சந்தித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தொலைத்தொடர்பு துறை மேம்பாட்டு பணிகளை விளக்கிக் கூறினர். இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென எம்பி கேட்டுக்கொண்டார்.
பின்பு எம்பி அண்ணாதுரை தெரிவிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் தொலை தொடர்பு வசதிகள் பின்தங்கி இருக்கிறது . தற்போது சாமானிய மக்களும் செல்போன் மற்றும் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர் . மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் இச்சூழ்நிலையில் தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தினேன்.
அதன் எதிரொலியாக தற்போது புதிய செல்போன் டவர்கள் மற்றும் பழைய அவர்களின் திறன் மேம்படுத்துதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் முடிவடைந்தவுடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் இணையவழி சேவை, செல்போன் சேவை முற்றிலுமாக மேம்படுத்தப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu