திருவண்ணாமலையில் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி
திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக, நகர்புற பகுதிகளில் நாளை முதல் 25-ந் தேதி வரை நடைபெற உள்ள மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
தற்போது தமிழகம் எதிர்நோக்கி உள்ள வடகிழக்கு பருவமழையினால் குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் உள்ளது. அதிகப்படியாக தேக்கமாகும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலையும் உள்ளது. மழைநீர் சாக்கடையுடன் கலந்து தேங்குவதால் இதர தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திடும் வகையில் நாளை (திங்கட்கிழமை) முதல் 25ம் தேதி (சனிக்கிழமை) வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்கள் 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்தப்படும்.
மேலும் நகராட்சி மற்றும் பேரூராட்களில் உள்ள கால்வாய்களை மழைநீர் வடிகால்கள் தூய்மை படுத்துவதன் மூலம் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவது தவிர்க்கப்படுவதுடன் தேங்கி நிற்கும் நீரினால் ஏற்படக்கூடிய நோய் தொற்று தடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலே கூறியுள்ள பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குனர், நகராட்சி, பேரூராட்சி ஆணையர்கள் , ஊரக வளர்ச்சித் துறைசெயலாளர்கள் , அலுவலர்கள் கண்காணித்து செயல்படுத்திடவும் அறிவுறுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu