இரவில் மாடு திருட முயன்றவரை பிடித்து கட்டி வைத்த கிராம மக்கள்

மாடு திருட முயன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் இருந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து கட்டிப்போட்ட பெரியகிளாம்பாடி கிராம மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் மன நலம் பாதித்தவர்களைப் போல வேடமிட்டு பகலில் விவசாய நிலங்களில் சுற்றித்திரிகிறார்கள். அப்போது அவர்கள் விவசாய நிலங்களில் கட்டி வைத்துள்ள பசுமாடுகளை நோட்டமிட்டு செல்கிறார்கள்.
இரவில் அனைவரும் தூங்கியதும் சரக்கு வேனுடன் சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு வந்து நோட்டமிட்டுச் சென்ற மாடுகளை திருடி வாகனத்தில் ஏற்றி கடத்தி சென்று விடுகிறார்கள். மாடுகள் திருடிச்செல்லும் சம்பவம் கலசபாக்கம் பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. அதேபோல் நேற்று மாலை கலசபாக்கத்தை அடுத்த பெரியகிளாம்பாடி கிராமத்தில் நடந்தது.
பெரியகிளாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் அருகில் ஒரு பசுமாடு கட்டி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவில் மர்ம நபர் அந்த மாட்டை அவிழ்க்க முயன்றபோது சப்தம் கேட்டு அங்கிருந்த யாழினி என்பவர் தட்டிக்கேட்டபோது ஆத்திரம் அடைந்த அந்த நபர் தான் வைத்திருந்த இரும்புக்கம்பியால் யாழினியை தாக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த யாழினி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்தார். அங்கு வந்தவர்கள் மாடு திருட முயன்ற மனநலம் பாதித்தவரைப் போல் இருந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து ஒரு இடத்தில் கட்டி வைத்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கலசபாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். அந்த நபர் இந்தியில் பேசியதால் போலீசாருக்கு புரியவில்லை. விசாரணை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வருமாறு கிராம மக்களிடம் கூறி விட்டு போலீசார் சென்று விட்டனர். மாடு திருட முயன்ற நபரை பிடித்து ஒப்படைத்தும், போலீசார் கண்டுகொள்ளாமல் சென்று விட்டதால், கிராம மக்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu