இந்திய பாரம்பரிய கலாசாரத்தின் அடையாளம் பழங்குடியின மக்கள்: ஆளுநர் ஆா்.என். ரவி

இந்திய பாரம்பரிய கலாசாரத்தின் அடையாளம் பழங்குடியின மக்கள்: ஆளுநர் ஆா்.என். ரவி
X

குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கிய ஆளுநர்

இந்திய பாரம்பரிய கலாசாரத்தின் அடையாளம் பழங்குடியின மக்கள். என தமிழக ஆளுநர் ஆா்.என். ரவி கூறினார்

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை வீரப்பனூா் ஊராட்சி, விளாம்பாக்கம் கிராமத்தில் பிரதமரின் பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். விளாங்குப்பம் கிராமத்திற்கு வருகை தந்த ஆளுநருக்கு மலைவாழ் மக்கள் தாரை தப்பட்டை முழங்க மலர்கள் தூவி ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் விளாங்குப்பம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சார்பில் ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர், பழங்குடியின மக்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் திட்டங்கள் குறித்த பதாகைகளை பார்வையிட்டார். மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த சிறுதானிய உணவு கண்காட்சியையும் பார்வையிட்டார்.

பின்னர் அவர், மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசும்போது, ஜவ்வாதுமலைக்கு நான் மூன்று முறை வந்துள்ளேன். பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக தொடா்ந்து வருவேன். அடுத்த முறை வரும்போது மக்களின் வாழ்க்கைத் தரம் உயா்ந்திருக்க வேண்டும். பழங்குடியின மக்கள் பின்தங்கிய மக்கள் என்று நினைக்கக் கூடாது. அவா்கள்தான் இந்திய பாரம்பரிய கலாசாரத்தின் அடையாளம்..

இவா்களின் நிலையை மாற்றியமைக்கும் முயற்சியில் பிரதமா் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். இந்தத் திட்டங்கள் மூலம் பழங்குடியின மக்கள் பயன்பெற்றால் தான் அரசுத் திட்டங்கள் முழுமை பெறும். தமிழகத்தில் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 1.20 கோடிப் போ் பயனடைந்துள்ளனா்.

மலைவாழ் மக்களிடையே கல்வி குறித்தான விழிப்புணர்வு அதிகம் இருக்க வேண்டும். பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும். கல்வியின் முக்கியத்துவம் குறித்து பிள்ளைகளுக்கு பெற்றோர் தெரிவிக்க வேண்டும். பெற்றோராகிய நீங்கள், ஒருஇடத்தில் படிப்பை நிறுத்தினாலும், உங்களுடைய பிள்ளைகள் படிப்பை நிறுத்தாமல் படிக்க வேண்டும். எதிர்காலம் சிறப்பாக இருக்க பிள்ளைகள் கட்டாயம் படிக்க வேண்டும்.

ஜவ்வாது மலை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஜவ்வாதுமலைக்கு மீண்டும் மீண்டும் வருவேன் என ஆளுநர் பேசினார்.

தொடா்ந்து, பழங்குடியினருக்கான செல்வ மகள் சேமிப்பு வங்கி கணக்குப் புத்தகங்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா். அப்போது, ஜவ்வாதுமலையில் விளைந்த சிறுதானியங்களான சாமை, தினை, வரகு, கொய்யா, சப்போட்டா போன்றவற்றை விளாம்பாக்கம் கிராம மக்கள் ஆளுநருக்கு வழங்கினா்.

பழங்குடியின மக்களுடன் சோ்ந்து உணவு சாப்பிட்ட ஆளுநா்

அதனைத்தொடர்ந்து ஆளுநர் ரவி , மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பழங்குடியின மக்களுடன் சோ்ந்து உணவு அருந்தினர். ஜவ்வாது மலையில் உள்ள மலைவாழ் மக்களால், மலையில் விளையக்கூடிய சாமை, வாழைப்பூ, கம்பு உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சாமை கேசரி, வாழைப்பூ வடை, கம்பு வடை, தயிர் சாதம், எலுமிச்சை பழம் சாதம், கொழுக்கட்டை, காராமணி சுண்டல் அப்பளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட உணவுகளை மலைவாழ் மக்களோடு அமர்ந்து சாப்பிட்டார்.

தொடா்ந்து, மத்திய மக்கள் தொடா்பகம் சாா்பில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தாா். மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சி, இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் அடங்கிய கண்காட்சி, அஞ்சல் துறையின் ஆதாா் சிறப்பு பதிவு முகாம் ஆகியவை நடைபெற்றது.

தொடா்ந்து, ஜமுனாமரத்தூா் வட்டம், குன்னிகாத்தூா் கிராமத்தில் உள்ள எஸ்.எப்.ஆா்.டி. பள்ளியின் கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்த ஆளுநா், மலைவாழ் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கெளரி, முக்கிய பிரமுகர்கள் மலைவாழ் மக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!