திருவண்ணாமலை அருகே நிலத் தகராறில் இளைஞரை கொலை செய்த அண்ணன் தம்பி

திருவண்ணாமலை அருகே நிலத் தகராறில் இளைஞரை கொலை செய்த அண்ணன் தம்பி
X
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே வரப்பு தகராறில் வாலிபரை கொலை செய்த அண்ணன், தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காந்தி, விவசாயி. இவரது தம்பி சுப்பிரமணி. இருவரும் தேவனாம்பட்டு மருத்துவமனை செல்லும் சாலையில் உள்ள நிலத்தை பாகப்பிரிவினை செய்து தனித்தனியே வீடு கட்டி நிலத்தில் வசித்து வருகின்றனர். சுப்பிரமணிக்கும், காந்திக்கும் வரப்பு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து உள்ளது. காந்திக்கு 2 மகள்களும், தங்கதுரை (வயது 28) என்ற மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

தங்கதுரை ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தங்கதுரைக்கும், அனிதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. 2 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையை பார்ப்பதற்காக ஓசூரில் இருந்து தங்கதுரை தேவனாம்பட்டு கிராமத்திற்கு வந்தார்.

சுப்பிரமணிக்கு வினோத், விஜி ஆகிய 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு மட்டும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் நிலத்தின் இடையே உள்ள வரப்பில் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த தேக்கு மரம் வெட்டுவதில் காந்தி குடும்பத்தினருக்கும் சுப்பிரமணி குடும்பத்திற்கும் கடந்த 10-ந் தேதி வாக்குவாதம் ஏற்பட்டு 2 குடும்பத்தினரும் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக வினோத், விஜி ஆகிய இருவரும் சேர்ந்து நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த தங்கதுரையை இரும்பு கம்பியால் அடித்து தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த தங்கதுரையை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கதுரை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன், போளூர் டி.எஸ்.பி. குமார், கலசபாக்கம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அண்ணன்-தம்பியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா