கலசப்பாக்கம் அருகே மீண்டும் அக்னி குண்டத்தை வைத்த வன்னியர் சங்கத்தினர்
மீண்டும் அக்னி குண்டத்தை வைத்த வன்னியர் சங்கத்தினர்
திருவண்ணாமலை - வேலூர் செல்லும் சாலையில் உள்ளது, நாயுடுமங்கலம் கூட்ரோடு. இங்கு நெடுஞ்சாலை ஓரமாக வன்னியர் சங்கம் சார்பில் அக்னி குண்டம் வைக்கப்பட்டிருந்தது. இந்த அக்னி குண்டத்தை, 1989ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் ராமதாஸ் திறந்து வைத்தார்.
இதையடுத்து, சாலை விரிவாக்கத்திற்காகவும், பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்பதற்காகவும், பொதுமக்களின் நலன் கருதி அந்த அக்னி குண்டத்தை வேறு இடத்துக்கு மாற்றிக்கொள்ளும் பொருட்டு, தற்காலிகமாக அகற்றிக் கொள்ளப்பட்டது. அதன்படிம் அதிகாரிகள் ஒதுக்கி தந்த பேருந்து நிலையம் பக்கத்தில் உள்ள இடத்தில் அந்த அக்னி குண்டம் நிறுவப்பட்டது.
சாலை விரிவாக்கம் மற்றும் நிழற்குடை கட்டும் பணி முடிவடைந்த நிலையில் அந்த அக்னி கலசம் நிழற்குடை பக்கத்தில் அதிகாரிகள் ஒதுக்கிச் சென்ற இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டது. பிறகு திடீரென கலசத்தை போலீசாரின் துணையோடு அதிகாரிகள் அகற்றினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாமகவினர் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட அதிகாரிகளை கண்டிப்பததாக கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தினர் ஆனாலும் அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.
இதனையடுத்து கடந்த 11 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் அக்னி கலசம் அகற்றப்பட்ட இடத்தில் முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமாா் தலைமையில், மீண்டும் அதே இடத்தில் அக்னி குண்டத்தை வைக்கவேண்டும் எனக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தகவலறிந்து சென்ற கலசப்பாக்கம் போலீஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 15 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா் மாலையில் அவா்களை விடுவித்தனா்.
இந்த நிலையில் வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி தலைமையில் இன்று காலை திருவண்ணாமலை அண்ணா நுழைவுவாயில் அருகில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் பேரணியாக நாயுடுமங்கலம் சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் இருந்து பல பகுதிகளில் இருந்தும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வந்தனர். இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இந்த பேரணியால் திருவண்ணாமலை முதல் நாயுடுமங்கலம் வரை உள்ள பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியது..
இந்நிலையில் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி தலைமையில் மீண்டும் அக்னிகுண்டம் அமைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் ஏந்தல் பக்தவச்சலம், பாண்டியன், வன்னியர் சங்க நிர்வாகிகள் ,உறுப்பினர்கள், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu