8 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற விற்பனையாளர் கணவருடன் தப்பி ஓட்டம்

கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி மூட்டைகள்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இதன் மாணவர் விடுதி காப்பாளராக அருணகிரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி, தோப்பூர் மற்றும் கல்யாணமந்தை கிராமங்களில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
ஜமுனாமரத்தூர் முஸ்லிம் தெருவில் அருணகிரியின் வீடு உள்ளது. இந்த நிலையில் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பருப்பு உள்ளிட்ட பொருட்களையும், ரேஷன் கடைகளுக்கு வந்த அசிரி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களையும் வீட்டில் பதுக்கி வைத்து வெளி சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.
நேற்று அருணகிரி வீட்டில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் வெளி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல சரக்கு வேனில் ஏற்றுவதாக கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
இதையடுத்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தனி தாசில்தார் ஜெகதீசன், துணை தாசில்தார் சீதாராமன், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார், ஜமுனாமரத்தூர் போலீசார் மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர் அருணகிரியின் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு சரக்கு வேனில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றும் போது கையும், களவுமாக அதிகாரிகள் பிடித்தனர். இதில் சுமார் 8 டன் எடை கொண்ட 158 ரேஷன் அரிசி மூட்டைகளும், பருப்பு, பட்டாணி, மிளகு போன்றவை கொண்ட 2 மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் அதிகாரிகள் வருவது குறித்து தகவலறிந்த அருணகிரியும், சாந்தியும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கணவன், மனைவியை வலைவீசி தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu