உரக்கட்டுப்பாட்டு ஆணையை மீறிய 2 கடைகளில் விற்பனைக்கு தற்காலிக தடை
பைல் படம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பு ஆய்வு குழுவினரால் அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை உர விற்பனை நிலையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், உரக்கிடங்குகள் மற்றும் கலவை உர உற்பத்தி நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
துரிஞ்சாபுரம் வட்டாரத்தில் வேளாண்மை உதவி இயக்குனர்கள் செல்வராஜ், அற்புதசெல்வி மற்றும் உர ஆய்வாளர் துரிஞ்சாபுரம் ஜி.அனுசுயா ஆகிய சிறப்பு ஆய்வுக் குழுவினரால் அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ஐ மீறிய 2 உர விற்பனை நிலையங்களுக்கு தற்காலிக விற்பனை செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் பாலா கூறுகையில், ஆய்வின் போது உரக்கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்பட்டு சில்லரை உர விற்பனை நிலையங்களுக்கு மொத்த உர விற்பனை நிலையங்கள் மூலம் வழங்கப்படும் உரங்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து யூரியா மற்றும் பிற உரங்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்தல், விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளுக்கு ஆதார் எண் பயன்படுத்தி உரங்களை விற்பனை செய்தல், உரங்களின் விற்பனை விலை விவரங்களை தகவல் பலகையில் எழுதி விவசாயிகளின் பார்வைக்கு தெரியும்படி வைத்திருத்தல், விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கான விற்பனை ரசீது மற்றும் அவ்விற்பனை ரசீதில் விவசாயிகளின் கையொப்பம் இருத்தல், உரங்களின் இருப்பு பதிவேடுகள் பராமரித்தல், கள்ளச்சந்தை, யூரியாவுடன் கூடுதல் இணைப்பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்தல் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆய்வின்போது உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ஐ மீறிய செயல்கள் உர விற்பனை நிலையங்களில் காணப்பட்டால் ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்களால் இருப்பு பதிவேட்டில் எழுத்துப்பூர்வமாக உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ஐ மீறிய செயல்களை பதிவு செய்து அந்த உர விற்பனை நிலையத்தில் உர உரிமம் ரத்து செய்ய நேரிடும்.
மேலும் நடப்பு பருவத்திற்கு தேவையான யூரியா 2 ஆயிரத்து 194 டன், டி.ஏ.பி. 1529 டன், பொட்டாஷ் 814 டன், சூப்பர் பாஸ்பேட் 417 டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 4 ஆயிரத்து 131 டன் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் சில்லரை உர நிலையங்களின் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu