ஜவ்வாது மலை கோடை விழா, மலர் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலம்
காய்கறிகள் மற்றும் பூக்கள் கண்காட்சியினை பார்வையிட்ட அமைச்சர்கள்
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் 23-வது கோடை விழா இன்று தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் இன்று நடந்த கோடைவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதிஸ்டாலின் 86,708 பேருக்கு நலத்திட்ட உதவி உள்பட 550.68 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று முன்தினம் மாலை வேலூர் வந்தார்.
நேற்று காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 10 கோடியே 81 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலைக்கு சென்றார்.
இன்று காலை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளத்தாளங்கள், பாராம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஜவ்வாதுமலையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு கோடை விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சிகளை பார்வையிட்டார். பின்னர் சுமார் 241 கோடி மதிப்பில் 86,708 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதையடுத்து கோடைவிழாவில் வைக்கப்பட்டிருந்த பல்துறை அரசு கண்காட்சி புகைப்படங்களை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் புதிய சுற்றுலா மாளிகை உட்பட பல்வேறு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். முன்னதாக புதிய சுற்றுலா மாளிகையை அவர் பார்வையிட்டார்.
இந்த விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், எம்எல்ஏக்கள் அம்பேத்குமார், சரவணன், கிரி, ஜோதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் உதயநிதி, போளூருக்கு சென்றார். அங்கு அமைக்கப்பட்டிருந்த கலைஞர் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து நாயுடுமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் 100 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் இன்று மதியம் திருவண்ணாமலைக்கு வந்தடைந்தார்.
இன்று மாலையில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.
இன்று மாலை அண்ணா நுழைவு வாயில் அருகே உள்ள கலைஞர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தமிழர்களின் வீரத்துக்கு சான்றாக உள்ள ஜல்லிக்கட்டுக்கு சட்ட அங்கீகாரத்தை முதல்வர் சமீபத்தில் பெற்றுக்கொடுத்தார். எனவே, அதன் அடையாளமாகவும், விவசாயத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை சிலை மற்றும் ரவுண்டானாவை உதயநிதி ஸ்டாலின் திறக்கிறார். பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து வேங்கிக்கால் திருமண மண்டபத்தில் நடைபெறும் சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் பயிற்சி கூட்டத்தில் பேச உள்ளார்.
நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்: மாலை 7 மணிக்கு கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் 10,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.
திருவண்ணாமலை-திருக்கோயிலூா் சாலை, நகராட்சி அலுவலகம் எதிரே மாவட்ட திமுக சாா்பில் இவ்விழா நடக்கிறது. இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும், திமுக உயா்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தலைமை வகிக்கிறாா். திமுக தணிக்கைக்குழு உறுப்பினரும், சட்டப்பேரவை துணைத் தலைவருமான கு.பிச்சாண்டி முன்னிலை வகிக்கிறாா். திமுக இளைஞரணிச் செயலாளரும், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கி, 10,100 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறாா்.
திருவண்ணாமலை நகரை இணைக்கும் 9 சாலைகளிலும் திமுக கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu