மேஸ்திரியிடம் மிரட்டி லஞ்சம் வாங்கிய தனிப்பிரிவு போலீஸ் கைது
கைது செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு விஜய்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா சிந்தாலூர் கிராமத்தை சேர்ந்த பெரியபையன் மகன் கோவிந்தராஜ், கட்டிட மேஸ்திரி. இவர் அந்த கிராமத்தில் சுமார் 3½ ஏக்கர் விவசாய நிலம் வைத்து உள்ளார். அதில் செங்கல் சூளை வைத்து உள்ளார். இவர் செங்கல் சூளைக்கு தேவையான எரிபொருளுக்காக காய்ந்த விறகுகள் மற்றும் மரக் கட்டைகளை அவரது சொந்த டிராக்டர் மூலமாக ஏற்றி எடுத்து சென்று வந்ததாக கூறப்படுகிறது.
ஜமுனாமரத்தூர் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டாக விஜய் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் கோவிந்தராஜை செம்மரம் கட்டைகள் கடத்துவதாக வழக்கு பதிவு செய்து விடுவேன் என்றும், வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.1 லட்சம், லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
தன்னால் அவ்வளவு தொகை கொடுக்க இயலாது என்று கோவிந்தராஜ் கூறியதாக தெரிகிறது. கடைசியாக ரூ.15 ஆயிரம் கொடு என்று விஜய் கேட்டு உள்ளார். பணம் கொடுக்க மனம் இல்லாத கோவிந்தராஜ் கடந்த மாதம் 25-ம் தேதி திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கிடையில் போலீஸ் ஏட்டு விஜய் வாணாபுரம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அவர் சில நாட்கள் விடுமுறையில் இருந்தார்.நேற்று அவர் வாணாபுரம் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசின் ஆலோசனையின் பேரில் கோவிந்தராஜ் நேற்று தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு விஜய்யை வாணாபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் சாலைக்கு வரவழைத்தார். அப்போது அங்கு கோவிந்தராஜ் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு விஜய்யிடம் வழங்கினார். அதனை அவர் வாங்கும் போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரபு, போலீசார் கோபிநாத், முருகன், சரவணன் கொண்ட குழுவினர் அவரை கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
லஞ்சம் வாங்கிய போது தனிப்பிரிவு போலீஸ் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu