பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணம்: தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
பைல் படம்
திருவண்ணாமலை அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் முருகேஷ் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
குழந்தை திருமணம் தொடர்பாக வரப்பெறும் புகாரின் அடிப்படையில் சமூக நலத்துறை அலுவலர்கள், போலீசார் குழந்தை திருமணங்களை தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கலசபாக்கம் அருகே பத்தியவாடி கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் பெற்றோரால் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகைக்கு புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் திருமணம் நடைபெற இருந்த மாணவியின் வீட்டுக்கு சென்று உள்ளனர்.
அங்கு சிறுமிக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததை பார்த்தனர்.
பின்னர் அதிகாரிகள் சிறுமியின் பெற்றோரை சந்தித்து படிக்கும் வயதில் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது என்றும் , இவ்வாறு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்றும் அறிவுரை கூறினர்.
மேலும் திருமணம் செய்து வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
மேலும் திருமணம் நடைபெறவிருந்த மாணவிக்கும் அறிவுரைகளை கூறி கல்வி, படிப்பின் முக்கியத்துவம் குறித்தும் அறிவுரை கூறினார்கள்.
மாப்பிள்ளை வீட்டாரிடமும் திருமண சட்ட திட்டங்கள் குறித்து அதிகாரிகள் எடுத்துக் கூறினர். இதனால் சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu