வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயிலில் பழமை மாறாமல் திருப்பணி: தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு
சிதிலமடைந்த வெள்ளந்தாங்கி ஈஸ்வரன் கோயில்
கலசபாக்கம் அருகே பழமை மாறாமல் திருப்பணி மேற்கொள்ள வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயிலில் தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு செய்தார். வரலாற்றிலும், ஆன்மீகத்திலும் புகழ்பெற்ற மாவட்டமாக திகழும் திருவண்ணாமலை மாவட்டத்தில் எண்ணற்ற சிறப்புமிக்க திருத்தலங்கள் அமைந்துள்ளன.
அப்படியொரு சிறப்புமிக்க திருத்தலம்தான் 'வெள்ளந்தாங்கி ஈஸ்வரன்' குடியிருக்கும் கற்கோயில். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த காந்தப்பாளையம் ஊராட்சியில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருவுடை நாயகி சமேத வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயில் உள்ளது.
தனுர் மாத உற்சவத்தின் போது உற்சவமூர்த்திகள் பர்வத மலையை கிரிவலம் வரும்போது முதல் நாள் இரவு இக்கோயிலில் தங்குவது வழக்கம். இதனைத் தொடர்ந்து மறுநாள் பர்வதமலை உற்சவமூர்த்திகள் கிரிவலம் வந்து கோயில் மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள கரைகண்டேஸ்வரர் கோயிலை சென்றடைவர்.
இக்கோயிலைப் பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்தக் கோயில் பருவதமலைக்கு அடிவாரத்திலும், மிருகண்ட நதி கரையோரமாகவும் அமைந்துள்ளது . இந்த திருத்தளத்தில் ரிஷி ஒருவர் நதியோரம் அமர்ந்து நமச்சிவாய மந்திரத்தை முழங்கி தியானத்தில் ஈடுபட்டாராம் .
அப்போது நதியில் தண்ணீர் குறைவாக தான் இருந்ததாம். அப்போது கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற சிறுவர்கள் நதியை கடக்க முயன்ற போது திடீரென ஏற்பட்ட வெள்ள பெருக்கில் நதிக்கு நடுவே சிக்கிக்கொண்டனர்.
சிறுவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட ரிஷி முனிவர் தனது தியானத்திலிருந்து எழுந்து சிவ சிவ என்றபடியே நதிக்குள் இறங்கி சிறுவர்களை காப்பாற்றினாராம். இந்த நிகழ்வின் போது வெள்ளம் தாங்கி நின்றதாம்.
அந்த ரிஷி முனிவர் சிறுவர்களை கரை சேரும் வரை நதியில் தண்ணீர் பாயாமல் நின்றுள்ளது. இதன் பிறகே நதியோரம் வெள்ளம் தாங்கி ஈஸ்வரன் கோயில் அமையப்பெற்றதாக திருத்தல வரலாறு அப்பகுதி மக்கள் கூறினர்.
இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க கோயில் பல ஆண்டு காலமாக சிதிலமடைந்துள்ளது. இக்கோயிலை புனரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கலசப்பாக்கம் எம்எல்ஏ மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 14ம் தேதி மாவட்ட ஆட்சியர் முருகேஷ், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பக்தர்கள் கிரிவலம் வரும் 23 கிலோமீட்டர் தூரத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயில் பகுதியில் ஆய்வு செய்தபோது பழமையான கோயிலை பார்வையிட்டார். இக்கோயிலை முழுமையாக பார்வையிட்ட ஆட்சியர் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்பொருள் துறை அதிகாரிகளுக்கு இக்கோயிலை பழமை மாறாமல் திருப்பணி பணிகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
அதன் தொடர்ச்சியாக தொன்மை மாறாமல் திருப்பணிகள் செய்து புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை ரூபாய் 61.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவின் பேரில் தொல்லியல் துறை ஆலோசகர் வெங்கடேசன், இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். விரைவில் முதற்கட்ட பணிகளும் தொடங்க இருப்பதாக அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu