ஜவ்வாதுமலையில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலி! அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்!

ஜவ்வாதுமலையில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலி! அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்!
X

சாத்தனூர் அணை

ஜவ்வாதுமலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ஜவ்வாதுமலையில் பெய்து வரும் தொடர் மழையால், மலையடிவாரத்தில் உள்ள குப்பநத்தம், செண்பகத் தோப்பு மற்றும் மிருகண்டா நதி ஆகிய 3 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 3 அணைகளில் இருந்தும் உபரி நீர் இன்று வெளியேற்றப்படுகிறது.

இதன் எதிரொலியாக செய்யாறு, கமண்டல நாக நதி குப்பநத்தம், செண்பகத் தோப்பு , மிருகண்டா நதி மற்றும் தென்பெண்ணை ஆற்றை ஒட்டி கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்தவாசல் அடுத்த படைவீடு அருகே 62.32 அடி உயரம் உள்ள செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் 55.40 அடியாக உள்ளது. அணையில் 218.277 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 41 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து கமண்டல நதியில் விநாடிக்கு 30 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை பகுதியில் 19.20 மி.மீ., மழை பெய்துள்ளது.

கலசப்பாக்கம் அருகே 22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 18.37 அடியாக உள்ளது. அணையில் 62.417 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு வரும் 40 கனஅடி தண்ணீரும் முழுவதுமாக செய்யாற்றில் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 22 மி.மீ., மழை பெய்துள்ளது.

செங்கம் அருகே 59.04 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 54.03 அடியை எட்டியது. அணையில் 574.25 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 55 கன அடி தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து செய்யாற்றில் விநாடிக்கு 81 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 12.60 மி.மீ., மழை பெய்துள்ளது.

தென்பெண்ணையாறு நீர்பிடிப்புப் பகுதியிலும் மழை பெய்து வருவதால், சாத்தனூர் அணைக்கு கடந்த 24 மணி நேரத்தில் இரு மடங்காக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு இன்று (அக்., 15ம் தேதி) காலை விநாடிக்கு 625 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 1,260 கனஅடியாக அதிகரித்துள்ளது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 97.35 அடியை எட்டியது. அணையில் 3,378 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 12 மி.மீ., மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் 18.38 மி.மீ., மழை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (அக்.,15-ம் தேதி) காலை நிலவரப்படி சராசரியாக 18.38 மி.மீ., மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக தண்டராம்பட்டு மற்றும் வெம்பாக்கம் பகுதிகளில் தலா 24 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும் திருவண்ணாமலையில் 8.2 மி.மீ., செங்கத்தில் 19.6 மி.மீ., போளூரில் 10.3 மி.மீ., ஜமுனாமரத்தூரில் 21.2 மி.மீ., கலசப்பாக்கத்தில் 17 மி.மீ., ஆரணியில் 18 மி.மீ., செய்யாறில் 17 மி.மீ., வந்தவாசியில் 23 மி.மீ., கீழ்பென்னாத்தூரில் 16.6 மி.மீ., சேத்துப்பட்டில் 21.6 மி.மீ., மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil