திருவண்ணாமலை அருகே பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

திருவண்ணாமலை அருகே பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
X

அதிகாரிகள் வரும் வரை சிறைபிடிக்கப்பட்ட அரசு பேருந்து.

திருவண்ணாமலை அருகே ஊசாம்பாடியில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்வதை கண்டித்து பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை - வேலுார் செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் ஊசாம்பாடி கிராமம் உள்ளது. இங்கு 6 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் எல்லா தேவைகளுக்கும் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருவண்ணாமலைக்குதான் செல்லவேண்டும்.

திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி செல்லும் (எண் 225) சாதாரண அரசு பஸ்கள் ஊசாம்பாடியில் நின்று செல்வதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் போளூரில் இருந்து ஊசாம்பாடியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ் ஒன்றில் ஏறினர்.

அவர்கள் கண்டக்டரிடம் ஊசாம்பாடிக்கு டிக்கெட் கேட்டு உள்ளனர். ஆனால் பஸ் அங்கு நிற்காது என்று கண்டக்டர் கூறியதாக தெரிகிறது. இதனால் இளைஞர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அவர்கள் இது குறித்து ஊரில் உள்ளவர்ளுக்கு செல்போன் மூலம் பேசி தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து கிராம மக்கள் ஊசாம்பாடி பஸ் நிறுத்தத்தில் தயாராக நின்றனர். தங்கள் ஊரை சேர்ந்த இளைஞர்கள் வந்த அந்த அரசு பஸ் அங்கு வந்தபோது காத்து நின்றவர்கள் அதனை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அந்த வழியாக திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ்களையும் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ஊசாம்பாடி பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என்று பலமுறை திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக அரசு பஸ்கள் ஊசாம்பாடி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஊசாம்பாடியில் பஸ்கள் நின்று செல்ல பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு சர்குலர் அனுப்பி 5 நாட்களுக்குள் ஊசாம்பாடி பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

அதன் பேரில் கிராம மக்கள் சிறைபிடித்த பஸ்களை விடுவித்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil