திருவண்ணாமலையில் மழையால் ஏற்பட்ட மின்தடை கண்டித்து பொது மக்கள் மறியல்
திருவண்ணாமலையில் மின் தடை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. நேற்று பகலில் வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் திருவண்ணாமலையை அடுத்த கலசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. அதைத் தொடர்ந்து இரவு 9 மணியளவில் திருவண்ணாமலையிலும் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இடி, மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாலையோரம் மரம் ஒன்று திடீரென சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
கலசபாக்கம் பகுதியில் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. திருவண்ணாமலை அருகே உள்ள துரிஞ்சாபுரம் காலனி பகுதியிலும் மின்தடை ஏற்பட்டது. வெகுநேரம் ஆகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலையில் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போாக்குவரத்து பாதிக்கப்பட்டதால் தாலுகா போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu